“நீதி வழங்குவதற்கு சாட்சியை விட உண்மை தான் முக்கியம்” என ஓங்கிச் சொல்கிறாள் பொன்மகள் வந்தாள்.
பெட்டிசன் பெத்துராஜின் மகளான வெண்பா பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சைக்கோ குற்றவாளி என்று போலீஸாரால் சுட்டுக்கொள்ளப்பட்ட சத்யஜோதிக்கு ஆதரவாக நீதிப்போராட்டத்தைத் துவங்குகிறாள். அங்கிருந்து படம் துவங்கிறது. பெண் குழந்தைகளைக் கடத்திக் கொலை செய்யும் சைக்கோ குற்றவாளி என்று நம்ப வைக்கப்பட்ட இறந்து போன சத்யஜோதியை நிரபராதி என நிரூபிக்கப் போராடும் வெண்பாவிற்கு சத்யஜோதி யார்? அதிகாரமும் பணபலமும் நீதியை தன் வீட்டு வேலைக்காரன் போல நடத்தும் காலத்தில் வெண்பாவின் அன்பான நீதி எப்படி வென்றது? இதற்கான பதிலை இரண்டு மணி நேரத்தில் மிக நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார்கள்.
வெண்பாவாக ஜோதிகா. ஜாக்பாட் ஜோதிகாவை லாக்டவுன் செய்து சீரியஸ் ஜோதிகாவை லாகின் செய்து அசத்தி இருக்கிறார். எவ்வளவு பெரிய நடிகரையும் தன் வசீகர வசனத்தால் ஓரங்கட்டும் பார்த்திபனையே சில பன்ச்களில் ஜோதிகா தெறிக்க விடுவதெல்லாம் அல்டிமேட் ரகம். படத்தில் ஜோதிகா பார்த்திபனின் வாதப்பிரதி வாதங்கள் ஜோர் ஜோர். பாக்கியராஜ் தனது வேலையைச் செவ்வனே செய்ய, நீதிபதியாக வரும் பிரதாப் போத்தன் மிக அழகாக நடித்துள்ளார். பாண்டியராஜனுக்கு பெரிய வேலை இல்லாவிட்டாலும் பிரதாப் போத்தனுக்கும் அவருக்குமான காட்சிகளில் ஸ்கோர் செய்துவிடுகிறார். தியகாராஜன் செய்யும் வில்லனத்தனம் ரசிக்கும் படியாகவே இருக்கிறது.
மெலிதாக சோகம் இழையோடும் கதை என்பதை அவ்வப்போது கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை நினைவூட்டுகிறது. ஊட்டியின் மலையழகையும் மலர் அழகையும் மழலையின் அழகாய் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர்.
படம் தாங்கி நிற்கும் கதை நம் நாட்டில் பெரும்பாலான பெண் குழந்தைகள் படும் வதை. இங்கு நிறைய குழந்தைகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறலைச் சொல்லத்துவங்கினால் நிறைய முகமூடி நல்லவர்களின் உண்மை முகம் அசிங்மாகி விடும். இந்தப்பொன்மகள் வந்தாள் அப்படியான காமவெறி போலிகளை எச்சரிக்கச் வந்திருக்கிறாள். ஆஷிபாக்களையும், நந்தினிகளையும், ஹாசினிகளையும் நினைவூட்டும் படம் பொள்ளாச்சி காமக் கொள்ளையர்களையும் அவர்களைத் தப்பிக்க வைக்கப் அயராது உழைக்கும் சுயநல வர்க்கத்தையும் தோலுரித்துக் காட்டுகிறது. வெல்டன் பிரெட்ரிக்!
‘பா’க்களில் வெண்பா எழுதுவது தான் மிகப்பெரிய கஷ்டம். ஆசிரிப்பாவில் சமரசம் செய்து விட முடியும். வெண்பாவில் அது முடியாது. சீர் தளை என இலக்கணம் எல்லாம் சரியாக அமைந்தால் தான் அது வெண்பா. இந்தப் பொன்மகள் வெண்பா அனைத்து இலக்கணத்தையும் கொண்டிருக்கிறாள். அதனால் நிச்சயம் இலக்கை அடைவாள்!
இத்தனை வருட சினிமா வாழ்வில் ஒரு படம் நேரடி ரிலீஸாக அனைவரின் வீட்டிற்குள்ளும் வந்திருப்பது இதுவே முதல்முறை. அந்தப் பெருமையை அமேசான் மூலமாகப் பொன்மகள் வந்தாள் படம் பெற்றிருக்கிறது. அது வீட்டிற்குள் வைத்துப் போற்றக்கூடிய படமாகவும் இருப்பது தான் சிறப்பு!
-மு.ஜெகன்சேட்