Tamil Movie Ads News and Videos Portal

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘பொய்யின்றி அமையாது உலகு’ பட ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பொய்யின்றி அமையாது உலகு’. இதில் நடிகர்கள் விவேக் பிரசன்னா, டேனியல் ஆனி போப், அர்ஜுனன், பிரவீண் நடிகைகள் சாக்‌ஷி அகர்வால்,ஸ்வயம்சித்தா, சஹானா, ஜமுனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை பேட்டை’ வசந்த் இசையமைத்திருக்கிறார். காமெடியுடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை தியா சினி கிரியேசன்ஸ் மற்றும் ரூல்ஸ் பிரேக்கர்ஸ் புரொடக்சன் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகன் நாராயணன் மற்றும் சக்திவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டத்தை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” நான்கு ஜோடிகள் கெட் டூ கெதர் சந்திப்பு ஒன்றில் சந்திக்கிறார்கள். இவர்கள் தங்களது செல்போனை வைத்துக்கொண்டு ஜாலியான விதிகளுடன் விளையாட தொடங்குகிறார்கள். அதாவது இந்த எட்டு பேரின் செல்போன்களுக்கு வரும் குறுஞ்செய்தியையும், அழைப்புகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும்படி வைத்திருக்க வேண்டும். இந்த நிபந்தனையுடன் நடைபெறும் அந்த விளையாட்டு, நகைச்சுவையாக தொடங்கி பல எதிர்பாராத சுவாரசியமான சம்பவங்களுடன் பயணிக்கிறது. இந்த ஆண்டில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ படத்தைத் தொடர்ந்து செல்போனை மையப்படுத்திய திரைக்கதை என்பதால், இதற்கு இளம் தலைமுறையினரிடத்தில் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். நகைச்சுவையுடன் கலந்த ஃபீல் குட் படைப்பாக ‘பொய்யின்றி அமையாது உலகு’ தயாராகி இருக்கிறது” என்றார்.