பீட்ஷா என்றொரு படம் தமிழ்சினிமாவில் ஒரு வித்தியாசமான ட்ரெண்ட்-ஐ செட் செய்த படம்..அப்படத்தின் சீக்வெல் போல சொல்லப்பட்டு பீட்ஷா 2 வெளியானது. அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தற்போது ஹாலிவுட் ஸ்டைலில் டைட்டில் வைத்து பீட்ஷா 3 த மம்மி வெளியாகியுள்ளது. எப்படி இருக்கிறது படம்?
ரெஸ்டாரண்ட் வைத்திருக்கும் ஹீரோ! அந்த ரெஸ்டாரண்டில் குடியிருக்கும் பேய்..அதைத் தொடர்ந்து நடக்கும் கொலைகள். கொலைகளுக்கு காரணம் ஹீரோ தான் என முடிவெடுக்கும் போலீஸ் கெளரவ். கெளரவின் தங்கைக்கும் பவித்திராவிற்கும் காதல்! அட இவ்வளவு லைன் போதாதா? திரைக்கதையை மின்னல் வேகத்தில் நகர்த்த!! ஆனால் அங்குதான் இயக்குநர் சற்று இடறியிருக்கிறார்.
பொன்னியின் செல்வனில் சேந்தன் அமுதனாக வந்த அஸ்வின் தான் இப்படத்தின் ஹீரோ! நல்ல நடிப்பையே கொடுத்துள்ளார். வில்லன் போல வரும் கெளரவ் இன்னும் கெளரவம் சேர்க்கும் வகையில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என நம்புவோம்! நாயகி பவித்திரா இயல்பாக நடித்துள்ளார். படத்தில் ஒளிப்பதிவாளர் தனது கலை நேர்த்தியை சிறப்பாக காட்டியிருக்கிறார்
இசையில் அருண் ராஜ் இன்னும் திகிலை கூட்டியிருக்கலாம் என்றாலும் இது மோசமில்லை. மோகன் கோவிந்த் இயக்கத்தில் இன்னும் ஒரு அசூரப்பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கலாம். வழக்கமான பேய்படங்களில் இருந்து மாறுபட்ட ஒன்றை எடுத்து பேய்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிய படமாக பீட்ஷா வந்ததால் தான் அப்படத்தை அப்போது ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால் பீட்ஷா 3 வழக்கமான பேய்படமாகவே இருப்பதால் படம் பெரிதாக ஈர்க்கவில்லை. “இந்த வீக் ரொம்பவும் வீக் ஆக இருக்கு” என தோன்றினால் பீட்ஷா3-ஐ டேஸ்ட் பார்க்கலாம்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்
#pizza