Tamil Movie Ads News and Videos Portal

பேட்டைக்காளி- விமர்சனம்

வீரம் எல்லோருக்குமானது. விளையாட்டும் எல்லோருக்குமானது. அங்கு வஞ்சமும், துரோகமும், சாதிவெறியும் வந்தால் வினை பெரிதாக இருக்கும் என்பதை 4 எபிசோடில் சொல்கிறது பேட்டைக்காளி.. இன்னும் அடுத்தடுத்த எபிசோட்ஸ் ஆஹா ஓடிடி யில வரவிருக்கிறது

ரைட்! பேட்டக்காளியின் கதை என்ன?

மதுரை மாவட்டத்தில் உள்ள ஊர் ஒன்றில் பெரிய தலக்கட்டு வேல ராமமூர்த்தி. அவர் ஜல்லிக்கட்டில் இறக்கி விடும் மாட்டை ஒரு குறிப்பிட்ட ஊர்க்காரர்கள் மட்டும் அடக்கக்கூடாது என்ற விதிமுறையை விதைக்கிறார். அதன் பின்னணியில் இருப்பது ஜாதிவெறி. வேல ராமமூர்த்தி குறிப்பிடும் ஊரைச் சேர்ந்த நாயகன் கலையரசனுக்கோ உலகத்தில் உள்ள எல்லா மாடுகளையும் அடக்க வேண்டும் என்பது லட்சியம்.. வேல ராமமூர்த்தியின் மகனுக்கு தந்தையின் இடத்தைப் பிடிப்பதே லட்சியம். கலையரசனுக்கு எவ்விதப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பது கிஷோரின் லட்சியம். திருமணம் பிள்ளைக்குட்டி என பார்க்காத கிஷோருக்கு கலையரசன் மருமகனாக தெரியாமல் மகனாக தெரிகிறார். வேல ராமமூர்த்தியின் ஜாதி வெறியும், கலையரசனின் வீரமும், வேல ராமமூர்த்தியின் இளம் மனைவி மற்றும் அவரது மகனின் சூழ்ச்சியும், என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதே பேட்டக்காளி கதை. இன்னும் பல கிளைக்கதைகள் உண்டு..

பேட்டக்காளி என்பது படத்தின் நாயகன் பெயரோ நாயகி பெயரோ அல்ல.. அது ஒரு மாட்டின் பெயர். இதிலிருந்தே இந்தப்படம் வீரம் சொரியும் அந்த வாயில்லா ஜீவனைப்பற்றிய படம் என்பது புரிந்துவிடுகிறது. மாடு செத்தால் மனிதன் செத்ததிற்கான காரியங்கள் அனைத்தும் செய்யப்படுவதும், மாடு பிடிக்காக உயிரையும் துச்சமென நினைக்கும் மதுரை மைந்தர்களும், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பின் பின்னணியும் இது வரை நாம் காணாத அனுபவங்கள். அதை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் இயக்குநர் ராஜ்குமாரின் பல்ஸ் அறிந்து உழைத்திருக்கிறார். இசை அமைப்பாளரும் கதையின் நகர்வை தன் ஒலிகளால் தெறிக்க விட்டிருக்கிறார். மதுரையின் மண்மனம் மாறாத எழுத்தால் இயக்குநர் ராஜ்குமார் கவனம் ஈர்க்கிறார்

படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரம் இவர் தான் எனச் சொல்ல முடியாதளவிற்கு எல்லா கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு. கலையரசன் துடிப்பும் வீரமும் உள்ள இளைஞராக நடித்து ஸ்கோர் வாங்கினால், வேல ராமமூர்த்தி வில்லத்தனத்தில் ஸ்கோர் வாங்குகிறார். கிஷோர் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அமைதி, ஆவேசம் என களத்தில் ஜொலிக்கிறார். ஷீலா மூன்றாம் எபிசோடில் தான் களம் இறங்கியுள்ளார். ஒவ்வொரு கேரக்டர்களுக்கான ரைட்டிங்கும் வலிமையாக இருப்பதால் பேட்டக்காளி ரொம்பவே ஈர்க்கிறான்.

முதல் இரண்டு எபிசோடில் சில அயர்ச்சியூட்டும் காட்சிகளும், பொருத்தமில்லாத மேக்கிங்கும் அமைந்திருப்பது சிறுகுறை. ஆனால் அடுத்த இரண்டு எபிசோட்கள் குறைகளை விட நிறைகளையே கொண்டிப்பதால் அடுத்தடுத்த எபிசோட்ஸை எதிர்பார்க்க வைக்கிறது பேட்டக்காளி
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்