Tamil Movie Ads News and Videos Portal

பெரியார் விவகாரம்..ரஜினிக்கு ஓர் செய்தி

அன்புள்ள ரஜினிகாந்த்..

கடைசியாக நீங்கள் நடித்த “தர்பார்” திரைப்படம் பார்த்தேன். அவ்வளவு சுவாரஸ்யமான கதைப்பின்னல் கொண்ட படம் இல்லையென்றாலும் உங்களது நோற்றமும், உடல்மொழியும், நடிப்பும் ரசிக்கும் படியாகவே இருந்தது. தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் உங்களைத் தவிர்த்துவிட்டு எதுவும் எழுதிடவோ, பேசிடவோ முடியாது என்கிற வரையில் உங்களது வெற்றி அசாத்தியமானது. நிற்க.

உங்களுக்காக யாரோ எழுதிய ஒரு பாடலில் “என் ஒருதுளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா?” என்று பாடிவது போல் நடித்திருப்பீர்களே, அப்படி தமிழக மக்கள் உங்களுடைய உழைப்பிற்கான வெகுமதியை கொட்டிக் கொடுக்குமளவிற்கு வருவதற்கான மூலாதாரத்தை வரலாற்றில் சற்று பின்னோக்கி பயணிக்க வேண்டும்..

தமிழகத்தில் மன்னராட்சி முறை இருந்த காலத்திலும் சரி, ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலும் சரி.. மிகச் சிறுபான்மையினராக இருந்த ஒரு குறிப்பிட்ட மக்கள் அரசிற்கு நெருக்கமாக இருந்து சுகபோகம் அனுபவத்தினர். கல்வி பெறுவதிலும், அரசாங்க உத்யோகங்களிலும் அவர்களே முன்னுரிமை பெற்றவர்களாக விளங்கினர். அதுமட்டுமன்றி மாபெரும் உடலுழைப்பை அடக்குமுறைகளின் வாயிலாக ஏனைய பெருவாரியான மக்களிடத்தில் இருந்து உறிஞ்சுவதற்கு துணை நின்றது மட்டுமல்லாமல், உழைக்கும் மக்களை சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் ஒதுக்கி வைத்து இழிவுபடுத்தினார்கள். அவர்கள் கல்வி கற்க கூடாதென்றும், இன்னார் இந்த தொழில் தான் செய்யவேண்டும் என்று நிர்பந்தித்தும் வைத்திருந்தார்கள்.

இப்படி இருந்த சூழலில் தான் காலனியாதிக்கத்தின் இறுதி காலகட்டத்தில் அயோத்திதாச பண்டிதர், ரெட்டமலை சீனிவாசன் போன்றோர் இந்த கொடிய மனிதமற்ற அடக்குமுறைகளுக்கு எதிராக பேசத் தொடங்குகிறார்கள். அவர்களுக்குப் பிறகு “பார்ப்பனர் அல்லாத இயக்கம்” உருப்பெற்று அதன் மூலம் சூத்திர இழிசாதிகளாக சொல்லப்பட்ட தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒருங்கிணைகிறார்கள்.

(இங்கு உங்களுக்கு ஒன்று புரிந்திருக்க வேண்டும். ஆம், நீங்கள் நினைத்தது போலவே நான் மேலே சொன்ன அந்த “குறிப்பிட்ட மக்கள்” பார்ப்பனர்களை தான்.)

பார்ப்பனரல்லாதார் இயக்கம் வலுப்பெறத் தொடங்கி, பின்னாளில் அது “நீதிக்கட்சி”யாக மாறி அதிகாரத்திற்கு வந்து, தமிழகத்தின் பெரும்பான்மை மக்களை கல்வியின் பக்கமும், வேலைவாய்ப்பின் பக்கமும் இழுக்கும் வேலையைச் செய்கிறது. விகிதாச்சார முறையினால் “சூத்திரன் கல்வி கற்றால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று” என்கிற பார்ப்பனர்களின் தாரக மந்திரம் மெல்ல மெல்ல அங்கிருந்து தான் வலுவிழக்கத் தொடங்கிறது.

சுதந்திரத்திற்கு பிறகான தமிழகத்தில் ராஜகோபாலச்சாரி என்கிற பார்ப்பனர், தமிழகத்தின் பெரும்பான்மை மக்களாகிய சூத்திரர்களை முடக்கும் வகையிலும், பார்ப்பனர்களின் மூலதாரமாகிய மனுகோட்பாட்டை செயல்படுத்தும் விதமாகவும் “குலக்கல்வி” திட்டத்தை அமல்படுத்துகிறார், இதனால் தமிழகத்தில் 3000 பள்ளிகள் மூடப்படுகிறது. அதனை பெரியாரின் ஒத்துழைப்போடு தமிழகத்தின் சூத்திர மக்கள் முறியடித்தார்கள். ராஜகோபாலாச்சாரி ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது.

தி.மு.க ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, தமிழகத்தின் சூத்திர மக்கள் அரசியல் அதிகாரத்திலும், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பார்ப்பனர்களுக்கு சரிநிகராக வர ஆரம்பித்தார்கள். அதன் பிறகு தி.மு.க – அ.தி.மு.க என மாறி மாறி ஆட்சி நடந்தாலும் தமிழக சூத்திர மக்களின் கல்வி, வேலைவாய்ப்பிற்கு எந்த பாதிப்பும் இல்லாமலே இருந்து வந்தது (ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு இப்போது எல்லாவற்றிற்கும் மீண்டும் ஆபத்து நேர்ந்திருக்கிறது என்பது தனிகதை)

மேற்சொன்ன இந்த வரலாறானது மிக மேலோட்டமானதே. இன்னும் விளக்கமாக எழுத வேண்டுமெனில்
தனி புத்தகமே எழுதலாம், ஆதலால் விட்டு விட்டு விசயத்திற்கு வருவோம்.

இப்படியாக கிட்டத்தட்ட நூறாண்டுகளாக பல ஆயிரம் பேர் தங்களது கடும் உழைப்பையும், உயிரையும் கொட்டிக் கொடுத்து தான்.. உங்களின் “ஒருதுளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு” தரும் அளவிற்கு தமிழர்களாகிய சூத்திரர்களை கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னுக்குக் கொண்டு வந்தவர்கள்.

அப்படி உங்களை உயர்த்தியவர்களைத் தான் இப்போது நீங்கள் காவிகளின் பிடியில் மாட்டிவிடுவதற்காக.. எந்த பார்ப்பனர்கள் வரலாறு முழுவதும் தமிழக சூத்திரர்களை அடிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்கிற பெருங்கனவோடு காத்திருக்கிறார்களோ, அதே பார்ப்பனர்களோடு கூடிப் பேசி இப்போது நீங்கள் களம் இறங்கியிருக்கிறீர்கள்.

நீங்கள் பெரியாரை வெளிப்படையாக விமர்சித்து அரசியலுக்கு அஸ்த்திவாரம் போட நினைக்கிறீர்கள், அது உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதாக கூட இருக்கலாம். ஆனால் இங்கு பெரியார் எதிர்ப்பு என்பது சுயமரியாதை எதிர்ப்பு, பெண்ணுரிமை எதிர்ப்பு, பகுத்தறிவு எதிர்ப்பு, சூத்திர எதிர்ப்பு மட்டுமல்ல… மனுகோட்பாடு ஆதரவு.. இதை நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்கள் என்பதும் தெரியும்..

65 வயதிலும் துள்ளலாக நீங்கள் நடிப்பதை பார்த்து ஆச்சர்யப்படலாம். ஆனால், 65 வயதில் நேரடியாக முதல்வர் கனவோடு அரசியலுக்கு வருகிற உங்களை துளியளவு கூட ரசிக்க முடியவில்லை. ஏனெனில் உலகிலேயே முதல் முறையாக உங்களால் கண்டுபிடிக்கப்பட்டு, அறிமுகபடுத்தப்பட்ட “ஆன்மீக அரசியலானது” தமிழக மக்களை இன்னும் 20 வருடங்களுக்கு பின்னோக்கியே இழுத்துவிடும்.

இப்போது மட்டுமென்ன தமிழகம் சொர்க்கபூமியாகவா இருக்கிறது? நான் வந்தால் என்ன நாசமாகிவிடப் போகிறது? என நீங்கள் கேட்கலாம்..

ஆம், இப்போது தமிழகம் சொர்க்கபூமியாக இல்லை தான். எல்லாவற்றிற்கும் நுழைவுத் தேர்வு.. வேலைவாய்ப்பில் வேற்று மாநிலத்தவர் குளறுபடி.. சாதிய கூர்தீட்டல்கள்.. என பல்வேறு சமூக சிக்கல்கள் இருக்கின்றன தான்.. 300, 400 ஆண்டுகால வரலாற்று வீழ்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல இப்போது தான் மேலெழும்பி வருகிறோம். அதற்கு இன்னுமொரு 100 ஆண்டுகள் கூட தேவைப்படலாம். ஆனால் உங்களின் ஆன்மீக அரசியல் எனும் பார்ப்பன பின்னணி அரசியல் இந்த நத்தை நகர்வை கூட முடக்கிப் போட்டுவிடும் என்கிற அக்கறை தான்.

இன்னும் நீட்டி முழுக்க விருப்பமில்லை, இறுதியாக சொல்கிறேன்.. உங்களுக்கே தெரியும் இந்த வாழ்க்கையை உங்களுக்கு வழங்கியவர்கள் தமிழர்கள். உங்களின் ஒருதுளி வியர்வைக்கு ஒரு பவுன் கொடுக்காவிட்டாலும், குண்டுமணி அளவாவது தங்க காசு கொடுத்திருப்பேன் என்கிற உரிமையில் சொல்கிறேன்…

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு”!!

நன்றி,

பா.பிரேம்.