அமேசான் நேரடியாக வெளியிட்டுள்ள மற்றொரு படம் பெண்குயின். இப்படம் தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் நேரத்தில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படம் நேற்று இரவு அமேசான் பிரேமில் ஸ்ட்ரீமிங் ஆனது. பெரும் எதிர்பார்ப்புடன் படம் பார்க்க அமர்ந்தால்….
ஸ்ஸ்ஸ்ஸ்..ப்பா
வயிற்றுப் பிள்ளையோடு இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு பூச்சிகள் என்றால் பயம். அதன் காரணம் அவரது முதல் குழந்தை காணாமல் போய் அக்குழந்தை கொல்லப்பட்டு பூச்சிகளுக்கு இரையாகி விட்டதாக அவரிடம் சொல்லப்பட்டிருக்கும். அவர் அதை நம்பாமல் தன் குழந்தை கிடைக்கும் என்றிருக்க குழந்தையும் அவருக்கு கிடைத்து விடுகிறது. நான்கு வருடங்களுக்குப்.பிறகு கிடைத்து விடும் குழந்தையிடம் இனம் புரியாத மாற்றம் தென்படுகிறது. அதற்கான காரணம் என்ன? குழந்தையை கடத்தி சைக்கோ டீம் யார் யார்? என்பது தான் பெண்குயினின் ஒன்லைன்..
கீர்த்தி சுரேஷ் எப்போதும் வாட்டமான முகத்தோடே காட்சி தருகிறார். கதைக்கு அது தேவை என்பதால் ஓ.கே. ஆனாலும் அதிக இறுக்கம் நம்மை நெருடுகிறது. வில்லனின் வில்லத்தனம் துளியும் எடுபடவே இல்லை. ஒரு சின்னப்பையன் மட்டும் அசாத்தியமான நடிப்பை கொடுத்துள்ளான். பெயர் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்தக் கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை
பின்னணி இசை சந்தோஷ் நாராயணனா? கொடுமையிலும் கொடுமை பின்னணி இசை. பாடல்களும் ஒன்றும் தேறியவாறு தெரியவில்லை. படத்தின் பெரிய ஆறுதல் ஒளிப்பதிவு மட்டும் தான். ஒவ்வொரு பிரேமமும் அழகியலின் உச்சம்
இதுதான் படத்தின் முடிவு எனபதை யூகிக்கக் கூடிய வாய்ப்புகளை ஆரம்பக் காட்சிகளிலே நமக்கு புரிய வைத்து விடுவதால் படம் துளியளவும் நம்மைக் கட்டிப் போடவில்லை.
லாஜிக் என்பதை மேஜிக் நிறைந்த காட்சிகளால் மறைக்கத் தெரியாவிட்டால் எந்தக் குயினாக இருந்தாலும் நம்மைக் கவர்வதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதற்கு பெண்குயின் சாட்சி
-மு.ஜெகன்சேட்