Tamil Movie Ads News and Videos Portal

அரச பயங்கரவாதத்தை தோலுரித்து காட்டும்’முத்துநகர் படுகொலை’!

நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் தயாரிப்பில் எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முத்துநகர் படுகொலை’. கடந்த 2018 மே-22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் 100வது நாளில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடும் அதில் கொடூரமாக 13 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்ட் நிகழ்வும் தமிழகத்தையே உலுக்கியது.. அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான உண்மைகள் என்ன என்பதை சொல்லும் 60 நிமிடம் கொண்ட ஒரு ஆவணப்படமாக இது உருவாகி உள்ளது.

ஏற்கனவே ‘மெரினா புரட்சி’ என்கிற இதேபோன்ற ஒரு ஆவணப்படத்தில் மெரினா போராட்டத்தின் கடைசி நாளன்று ஏன் வன்முறை களமாக மாறியது, அதன் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் விதமாக படமாக்கியிருந்தார் எம்எஸ்.ராஜ்.

அதேபோலத்தான் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ‘முத்துநகர் படுகொலை’ என்கிற பெயரில் விறுவிறுப்பான திரைப்படம் போன்ற ஒரு ஆவணப்படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜ்.

இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திரைக்கலைஞர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர்.
 
இந்த நிகழ்வில் இயக்குனர் எம்.எஸ்.ராஜ் பேசும்போது. “இது ஒரு புலனாய்வு ஆவண திரைப்படம்.. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை மட்டுமே சொல்லியிருக்கிறோம். தொடர்ந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை பெற்று வரும் இந்த படம் 12வது தாதாசாகேப் பால்கே விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு சிறந்த படமாக ஜூரி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல பிரேசிலில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட 2142 திரைப்படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 41 படங்களில் இந்தியாவில் இருந்து இடம் பிடித்த ஒரே படம் என்கிற பெருமையையும் இது பெற்றுள்ளது.

தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் மக்கள் மீது செலுத்தப்படும் அடக்குமுறையை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த படத்தை எடுக்கிறோம் என்கிற செய்தி தெரிந்ததுமே அடுத்த இரண்டாவது நாளே ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தூத்துக்குடியில் என் பெயரில் காவல் நிலையத்தில் புகார் செய்தாது. உடனே போலீஸாரும் இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டுமென சம்மன் அனுப்பினார்கள்.  எந்த சட்டப்பிரிவில் இப்படி சம்மன் அனுப்பி இருக்கிறீர்கள் என்று நான் கேட்டதும் அதன்பிறகு அவர்களிடம் பதில் இல்லை. அதேசமயம் இந்த படம் முக்கியமானவர்களுக்காக திரையிட்டுக்காட்டப்படும் போதெல்லாம் போலீசாரிடம் இருந்து தொடர் கண்காணிப்பும் நெருக்கடியும் இருந்து வருகிறது. இதோ இன்றுகூட இங்கே அழையா விருந்தாளிகளாக இந்த நிகழ்வை கண்காணிக்க உளவுத்துறை போலீஸார் அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்னும் வெளியாகாத ஒரு படத்திற்கு எதற்காக இப்படி ஒரு நெருக்கடி..? இத்தனைக்கும் நாங்கள் நடந்த நிகழ்வை மட்டுமே படமாக எடுத்துள்ளோம். இந்த படத்தை 32 நாடுகளில் திரையிட்டு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ளவர்களிடம் கையெழுத்து பெற்று அதை தமிழக அரசிடம் கோரிக்கையாக முன்வைக்க இருக்கிறோம்.

ஆனால் இவ்வளவு நெருக்கடிகளை பார்க்கும்போது, தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லையா என்கிற கேள்வியும் எழுகிறது.. டெல்லியில் இந்த படத்தை திரையிட்டபோது படம் பார்த்த குஜராத், பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர்கள் கண்ணீர் விட்டனர்.  

இந்த படத்தை பார்த்தபிறகு நிச்சயமாக உங்களால் சில நாட்களுக்கு நிம்மதியாக இருக்க முடியாது.. அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் அங்குள்ள மக்களின் கோரிக்கையாக மட்டுமல்ல அனைவரும் எண்ணமாகவும் இருக்கிறது” என்று பேசினார்.

இந்த படத்தை பார்த்துவிட்டு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் பேசும்போது, “ஆவணப்படம் தான் என்றாலும் ஒரு முழுநீள திரைப்படம் பார்ப்பது போல மிக நேர்த்தியாக, விறுவிறுப்பாக, நடந்த உண்மையை அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ்.  இந்த படம், பார்ப்பவர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் எந்த இடத்திலும் புனைவு என்பதே இல்லை.. ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன, அடுத்து என்ன என்பது போன்று விறுவிறுப்பாக இதை இயக்கியுள்ளார்.

அரசு பயங்கரவாதம் எப்படி அரங்கேறியது, ஒரு தனியார் நிறுவனத்தை பாதுகாப்பதற்காக அதிகாரவர்க்கம் என்னென்ன முயற்சிகள் செய்தன. அப்போது முதல்வராக இருந்தவரே தொலைக்காட்சியை பார்த்து தான் என்ன நடந்தது என்று தெரிந்து கொண்டேன் என்று சொல்லுமளவிற்கு, இந்த துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்பது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளார் இயக்குனர் ராஜ்.
குறிப்பாக துப்பாக்கி சூடு என்கிற நிலை வரும்போது காவலர்கள் சாதாரணமாக வைத்திருக்கும் ரைபிளில் இருந்து தான் சுட வேண்டும் அவர்களுக்கு ஸ்னைப்பர் என்கிற துப்பாக்கியை வழங்கியது யார் ? இதில் கொல்லப்பட்ட அனைவருமே குறிபார்த்து சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஸ்டெர்லைட் நிறுவனம் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எத்தனை கோடி தேர்தல் நிதி வழங்கியது என்பது குறித்த தகவலையும் கூறியுள்ளார் இயக்குனர் ராஜ். ஒரு திரைப்படத்திற்கான நேர்த்தி இந்த ஆவணப்படத்தில் இருக்கிறது.

இந்த படம் இன்னும் வெளிவராத நிலையிலேயே இந்த பட இயக்குனருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் இனி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே கூடாது என்பதைத்தான் உரக்கச் சொல்வார்கள்: என்று பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது, “இது வெறும் போராட்டம் அல்ல.. அதேபோல நடைபெற்றது மக்கள் படுகொலை மட்டுமல்ல.. சுற்றுச்சூழல் படுகொலையும் தான்.. ஆலை முதலாளிகள் அரசாங்கத்தையே விலைக்கு வாங்க முடியும் என்பதை காட்டும் விதமாக நடந்த நிகழ்வுதான் இது.

இந்த சம்பவம் நடந்தது பற்றி தொலைக்காட்சியில் தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்ன அப்போதைய முதல்வர், அதன்பிறகு சட்டசபையில் அந்த கலவரத்தை அடக்குவதற்கு நாங்கள் என்னென்ன முயற்சி எடுத்தோம் என்று மாற்றி மாற்றி பேசினார். இந்தப் படத்தை எடுப்பதற்கு போலீசார் எதற்காக நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.. தற்போது கூட வாசலில் போலீசார் நிற்பதை பார்த்ததும் திருமாவளவன் எம்.பிக்கு பாதுகாப்பு கொடுக்கத்தான் வந்துள்ளார்கள் என நினைத்தென்.. ஆனால் உண்மை விஷயம் இப்போது தான் தெரிகிறது.. இப்படி ஒரு ஆவணப்படம் எடுத்ததற்காக இயக்குனர் ராஜூவை தமிழக அரசு அழைத்து பாராட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்” என்று கூறினார்.

இந்தப்படம் விரைவில் தணிக்கை வாரியத்தின் பார்வைக்கு செல்ல இருக்கிறது.. அதை தொடர்ந்து இந்தப்படத்தின் ரிலீஸ் பற்றிய விபரம் அறிவிக்கப்படும் என கூறினார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ்.