திரும்பும் திசையெல்லாம் கூச்சல் அதிகம் இருந்தாலும் எதோ ஒரு இடத்தில் ஓர் அமைதி நம்மை ஆட்கொள்ளும். அந்த அமைதியை நாம் கண்டடையும் கணம் அலாதி இன்பமாக இருக்கும். அப்படியொரு துன்பியல் கலந்த இன்ப அனுபவம் பயணிகள் கவனிக்கவும் படம்.
ஒருவரின் அனுமதி இல்லாமல் போட்டோ எடுப்பதே தவறு. அதையும் மீறி அவரின் பின்கதையை என்னவென அறியாமலே ஒருவரை பற்றி நாமே ஒரு சித்திரத்தைத் தீட்டி இணையத்தில் பதிவிடுகிறோம். விசயம் புதுசாக இருந்தால் எல்லாரும் பத்து குருப்பிற்கு அதை ஷேர் செய்து புளகாகிதம் அடைவதும் இன்றைய எதார்த்தம். But அந்த சோசியல் மீடியாவின் தாக்கம் சம்பந்தப்பட்டவர்களை எப்படித் தாக்கும் என்பதை முகத்தில் அறையாமல் மனதில் அறைந்து சொல்கிறது படம். மலையாளத்தில் பெரு வெற்றிபெற்ற படமாக இருந்தாலும் அதை தமிழ்ப்படுத்தியதில் தனித்துவம் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
விதார்த் என்ற மாபெரும் நடிகரை உச்சத்தில் வைத்து கொண்டாட தோன்றுகிறது “இயலாமை, வறுமை, பொறுமை, வெறுமை, துளியூண்டு பெருமை என அத்தனை விதமான உணர்வுகளையும் முகத்திலும் வாய்பேச வராத குரலிலும் கொண்டு வந்திருக்கிறார் விதார்த். Hats of to you சகோ! இந்த வருடம் எத்தனை விருதுகள் காத்திருக்கிறதோ!! கருணாகரன் தேர்ந்த நடிகர் என்பதற்கு இந்தப்படமும் ஓர் சாட்சி..லெட்சுமி, மாசூம் சங்கர் என படத்தில் அனைவருமே சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
படத்தில் கேமராமேன் பணி, இசைஞர் பணி, எடிட்டர் பணி உள்பட எல்லோருமே தங்கள் பணிகளை கச்சதமாகச் செய்துள்ளனர்.
இப்பொன்னுலகில் நாம் அள்ளிச் செல்ல எதுவுமே இருக்காது. அள்ளிச் செல்லவும் முடியாது. ஆனால் நிறையவற்றை விட்டுச் செல்ல முடியும். அதில் அன்பை, மன்னிப்பை, சகிப்புத்தன்மையை விட்டுச் சென்றால் நாம் சென்றபின்பும் இப்பொன்னுலகம் நம்மை போற்றும் என்ற எண்ணம் படத்தின் நிறைவுக் காட்சியில் தெரிந்தது.
மொத்தப்படத்தையும் தாங்கும் அளவிலான கதையா? என்றால் இல்லைதான். ஆனால் படம் பேசியிருக்கும் விசயமும் விதமும் இதமளிக்கும் என்பதால் குறைகள் மறந்து நிறைய ரசிக்க முடியும்.ஆஹா ஓடிடியில் வெளிவந்துள்ள இப்படத்தை நிச்சயம் ஆகா என கொண்டாடலாம்..So ரசிகர்களின் கவனத்திற்கு..
-மு.ஜெகன் கவிராஜ்