சைக்கோ கில்லர் கதையை ப்ரீயட் காலத்துக்கு அழைத்துச் சென்று சொ(கொ)ல்கிறது பட்டாம்பூச்சி
தூக்குத் தண்டனை கைதியான ஜெய், ஜெயலில் இருந்து தன்மீதான குற்றங்களை லாவகமாக மறைத்து ஜெயிலில் இருந்து வெளிவருகிறார். நேர்மையான போலீஸ் அதிகாரியான சுந்தர் சி ஜெய்யை மறுபடியும் உள்ளே தள்ள முடிவெடிக்கிறார். முடிவு என்ன என்பதே பட்டாம் பூச்சி
சைக்கோ கொலைகாரனாக ஜெய்யை முதலில் ஏற்க மறுத்தாலும் போகப்போக அக்கேரக்டருக்குள் பொருந்திப் போகிறார். தலையை அவ்வப்போது வெட்டி வெட்டி அவர் நடிப்பது ஓரளவு பரவாயில்லை. சுந்தர் சி படம் நெடுக பெரிய எனர்ஜியின்றியே நடித்துள்ளார். நடிகை அனிரோஸ் ஓரளவு ஓ.கே ரகம்
1980 காலகட்டங்களை கண்களில் காட்ட கேமராமேனும் ஆர்ட் டைரக்டரும் நன்றாக உழைத்துள்ளனர். பின்னணி இசையில் இசையை விட இரைச்சல் தான் அதிகம். எடிட்டர் பின்பாதியில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்
பத்ரியின் இயக்கத்தில் கத்தி போட வேண்டிய இடங்கள் படத்தில் நிறையவே இருக்கின்றன. தேவையில்லாத காட்சிள் அங்கங்கே தென்படுகின்றன. குறிப்பாக அனிரோஸை கட்டிப்போட்டு விட்டு ஜெய் பேட்டரி வாங்கச் செல்லும் காட்சியில், படத்தின் சார்ஜர் மொத்தமாக இறங்கிவிடுகிறது
இவ்வளவு வன்முறையும் கோரமும் நிறைந்த காட்சியமைப்புகள் படத்தில் எதற்கு? இவ்வளவு வன்முறைகளை தாங்குவதற்கான வீரியம் திரைக்கதையில் இல்லை என்பதாலே நமக்கு இக்கேள்வி எழுகிறது. இருப்பினும் படத்தின் முன்பாதியில் ஓரளவு செறிவு இருந்தது. அந்தச் செறிவில் சிறிது கூட பின்பாதியில் இல்லை என்பதால் படம் நிறைவைத் தரவில்லை
-மு.ஜெகன் கவிராஜ்