ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி இதன் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் (18.03.2023) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படத்தின் ட்ரைய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது.
அடுத்து மேடை ஏறியவர் இயக்குநர், நடிகர் என பன்முகத் திறன் கொண்ட டி. ராஜேந்திரன். அவர் பேசியதாவது, ” இப்படி மேடை ஏறி உங்கள் அனைவரையும் நான் சந்திப்பேன் என்று நினைத்து பார்க்கவே இல்லை. உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி வரவில்லை. நான் அமெரிக்கா சென்று என் உடல் ஆரோக்கியத்திற்காக சிகிச்சை எடுத்து வந்த பிறகு கூட்டம் இருக்கும் இடங்களுக்கு பெரிதாக நான் செல்வதில்லை. ஆனால் இங்கு இருப்பதும் திரளான கூட்டம். இந்த நிகழ்ச்சிக்கு நான் வரவேண்டும் என்று என் மகனுக்கு ஒரு நாட்டம். நான் வரவில்லை என்றால் என் மகனுக்கு வந்து விடும் வாட்டம். என்னை பார்த்ததும் எஸ் டி ஆர் ரசிகர்களுக்கு ஆனந்த நீரோட்டம். அதற்கு காரணம் இந்த ‘பத்து தல’ என்ற தேரோட்டம். என் மகனும் என்னை போல் தமிழில் பேசட்டும், இறைவன் அருளால் பல காலம் வாழட்டும். இப்படி நான் பேச ஆரம்பித்தால் விடியும் வரை பேசிக் கொண்டிருப்பேன். ஆனால் அதிகம் நான் பேசக்கூடாது என்று என் மனைவி உஷா அன்பு கட்டளை விதித்துள்ளார். சிம்பு என்னை மேலே ஏறக்கூடாது என்று சொல்வார். அப்படியே ஏறினாலும் அவரது ரசிகர்களை நான் திருப்தி படுத்தாமல் கீழே வரக்கூடாது என்று சொல்வார். கலைஞனாக அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்று சொல்வார். அமெரிக்கா போய் விட்டு நான் இங்கு வந்து நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் மகனின் அன்பு. அந்த அன்புக்காகவே இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தேன்’ என படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.