அன்றாட வாழ்வில் நம் வேர் தெரிந்தவர் நமக்கே தெரியாமல் வெட்டும் குழியிலிருந்து யாரோ பேர் தெரியாதவர் நம்மை காப்பாற்றி இருப்பார். அப்படியான கதையை உள்ளடக்கி வந்திருக்கிறது பருந்தாகுது ஊர்க்குருவி
நாயகன் நிஷாந்த் கேரளா பார்டர் அருகேயுள்ள கிராமத்தில் தானுண்டு தன் திருட்டு உண்டு என்று திரிகிறார். சென்னையிலிருந்து அந்தப் பார்டர் அருகேயுள்ள காட்டுக்கு வருகிறார் விவேக் பிரசன்னா. விவேக் பிரசன்னா மீது கொலை முயற்சி நடக்கிறது. வெட்டுக்காயங்களோடு தப்பிக் காட்டில் தனித்துக் கிடக்கிறார் அந்தக் காட்டை நன்கறிந்த நிஷாந்த் போலீஸ் மூலம் அங்கு வருகிறார். விவேக் பிரசன்னாவை ஒழித்துக்கட்ட நினைத்தவர்கள் யார்? விவேக் பிரசன்னா எதற்காக தனது மனைவியால் இங்கு அனுப்பி வைக்கப்பட்டார்? நிஷாந்த் விவேக் பிரசன்னாவை காப்பாற்றி கரை சேர்த்தாரா? ஆகிய கேள்விகளுக்கு விடையளிக்கிறது படம்
அறிமுக குருவியாக இருந்தாலும் ஆர்வம் தாண்டி ஆற்றலோடு பறக்கிறார் நிஷாந்த். முதல் படத்திலே காமெடி, ஆக்ஷன், எமோஷ்னல் என எல்லா ஏரியாவிலும் பாஸ் மார்க் வாங்குகிறார். விவேக் பிரசன்னா துரோகம் தாங்கிய மனிதராக கவனம் ஈர்க்கிறார். காயத்ரி ஐயர் கேரக்டரின் வடிவம் பெரிதாக இருந்த அளவிற்கு அவர் நடிப்பு இல்லாவிட்டாலும் பெருங்குறையாக தெரியவில்லை. சினிமா ரிவீவர் கோடங்கி வடிவேலு தனது அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளார். கெளதம், ராஜேஷ், ஆனந்த், ஆதிக் என படத்தில் பங்காற்றிய நடிகர்கள் அனைவருமே கவனம் குவிக்கிறார்கள்
அஷ்வின் நோலின் சினிமாட்டகிராபி படத்தின் மிகப்பெரிய பில்லர் எனலாம். காட்டில் நடக்கும் காட்சிகளுக்கு எல்லாம் தன் ஆங்கிள்களால் உயிர் கொடுத்துள்ளார். ரஞ்சித் உன்னியின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை நன்றாக எடுபட்டுள்ளது.
நிதானமான கதை சொல்லல் என்றாலும், திரைக்கதை தெளிவாக தன் இலக்கை சென்றடைகிறது. அந்த வகையில் தன் முதல் படத்திலே முத்திரைப்பதித்துள்ளார் இயக்குநர் தனபால் கோவிந்த்ராஜ். சில நல்ல மனிதர்களை
குருவிகள் தானே பொசுக்கி விடலாம் என கயவர்கள் நினைக்கும் போது, காலம் குருவிகளுக்கு பருந்துக்கான திறனை வழங்கும். இதுவே காலத்தின் எதார்த்தம். இதை அழகாக தொகுத்தளித்துள்ளது படம். இந்தப்படத்தின் தயாரிப்பில் நிறைய சவால்களை சந்தித்து சரியான குவாலிட்டியோடு படத்தை வழங்கியுள்ளார்கள் தயாரிப்பாளர்கள் சுரேஷ் ஈவ், சுந்தர் கிருஷ்ணா, வெங்கட் ஆகியோர். வாழ்த்துகள்!
சிறிய படங்கள் செறிவான திரைக்கதையோடு வரும் போது அதை வரவேற்று ஆதரவு கொடுக்கும் போதுதான் நம் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு நகரும். நகர்த்துவோம்..
3/5
-மு.ஜெகன் கவிராஜ்
#ParundhaaguthuOorkuruvi