Tamil Movie Ads News and Videos Portal

பாரிஸ் ஜெயராஜ்- விமர்சனம்

ஒமகசியா போன்ற பாடல்களை கேட்டால் அது ஹாரிஸ் ஜெயராஜ், “காவாக்கு கீழ கல்லுடி… காதலை நீ சொல்லுடி”ன்னு பாடுனா அது பாரிஸ் ஜெயராஜ். A1 படம் மூலமாக நச் காமெடி விருந்து வைத்த சந்தானம் ஜான்சன் கூட்டணி தற்போது பாரிஸ் ஜெயராஜ் படத்தில் இணைந்திருக்கிறது.

வடசென்னை கானா கிங் ஆன சந்தானத்திற்கு ஒரு காதல் காலைவார..அதற்கு மருந்தாக இன்னொரு காதல் மலர்கிறது. அந்தக்காதலுக்கான சிக்கல் இதுவரை தமிழ்சினிமா கண்ட சிக்கலாக இருந்தாலும் ..அதை நக்கலும் விக்கலுமாக கையாண்டு சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

வடசென்னை தாடியோடு தன் டாடிட்ட லொள்ளு பண்ணும் போதும் சரி, காதலி அனைகா சோட்டியிடம் ஜொள்ளு விடும் போதும் சரி, நச் நச் நச் பஞ்ச்களால் அள்ளு விடும்போதும் சரி..மிக அழகாக ஈர்க்கிறார் சந்தானம். அனைகா சோட்டி அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார். டப்பிங்கில் தான் லிப் சிங் அநியாயத்திற்கு உறுத்துகிறது. வழமை போல மொட்டை ராஜேந்திரன், அவரின் கையாளாக வரும் கேரக்டர், மற்றும் தங்கதுரை ஆகிய மூவரும் அசத்தி இருக்கிறார்கள். படத்தில் சந்தானத்தின் தந்தையாக வரும் ப்ருத்வி ராஜும் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் காது சில இடங்களில் விண் விண் என தெறிக்கிறது. அதே சமயம் பல இடங்களில் இனிக்கிறது. வெறும் காதலை மட்டும் வைத்து முன்பாதி சாதாரணமாக கடந்தாலும் பின்பாதியில் ஓரளவு நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் முதலுக்கு மோசம் இல்லாமல் ஜாலியாக ரசித்து விட்டு வருவதற்கு உத்திரவாதம் உண்டு!So வீக் எண்டை பாரிஸ் ஜெயராஜோடு என்சாய் பண்ணுங்க!