Tamil Movie Ads News and Videos Portal

பாமர இலக்கியம்-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

புத்தகத்தோட ஒவ்வொரு பக்கங்களிலும் மதுரை, கம்பம், தேனி, போடி நாயக்கனூர் போன்ற ஏரியாக்களின் மண்ணும் மக்களுமாய் விரிஞ்சு கிடக்காங்க. 875 பக்கங்கள் கொண்ட இந்த பெரு நூல்ல, நூல் அளவும் விலகல அச்சு அசலான வட்டார வழக்கும், அழகான எழுத்து நடையும். கஸ்தூரிராஜாவின் திரை எழுத்துல இருந்த மண்வாசம் ரொம்பத் தூக்கலா இந்த நூல்ல வாச்சுக்கிடக்கு களவெத்தி, கோழிக்கூடை, கமலக் கயிறு, கூணை, நெல்லறுப்புல பாடுத பாட்டுக, களவெட்டுல பேசுத கதைக என மனசை கவர்மெண்ட் பஸ்ல ஏத்தி ஊருக்குக் கொண்டு போறாங்க நூல்ல வர்ற பொருட்களும் ஆட்களும்

காதலு கை கூட மொளப்பாரி போடுறா பொண்ணு. அவ மொளப்பாரி எந்திட்டு வார அழகைப் பாக்க தவதாயப்பட்டு ஓடியாறான் பய. அந்தப் பொண்ணுமேல ஒருதலையா கிறுக்குப் பிடிச்ச அலையுற ஒரு தறுதல, பெண்ணக் காண வார காதலனை அடிச்சு செதச்சிடுறான். அவன் செத்துட்டதா ஊரே சொல்லுது. ஆனா அவளுக்கு துளியூண்டு நம்பிக்க இருக்கு. காதலனை அடையணும்.. அவனை அடிச்ச தறுதலய அவமானப்படுத்தணும்னு ஒரு வைராக்கியம் இருக்கு அவட்ட. அதுக்காண்டி அந்த வீரத்தமிழச்சி போடுறா பாருங்கய்யா ஒரு திட்டம். அடேயப்பா நம்மூர் பொம்பளைக, “மண்ண பொன்னாக்கிப் புடுவாக, பொன்ன மண்ணாக்கிப் புடுவாக” னு சொல்றது தான் எவ்வளவு நெசம்.

இன்னொரு சம்பவத்துல காளைய அடக்குனா பொண்ணு கிடைக்கும். காளைய அடக்குமுன்னே பயனயும் பிள்ளயும் விரும்பிட்டாக. காளை அவளுக்கு தம்பி மாதி. காதலன் அவ உசுருல பாதி. யாரு ஜெயிச்சு யாரு தோத்தாலும் வலிக்கும். யாரு தோத்து யாரு ஜெயிச்சாலும் வலிக்கும். வாயுள்ள ஜீவங்க ரெண்டும் வாயில்லா ஜீவன் ஒன்னும் அப்ப எடுக்குற ஒரு முடிவு நெஞ்ச நெறச்சிப்புடிச்சு. இதுபோல புத்தகத்துல எத்தனையோ கதைகளும், சம்பவங்களும் வருது. ஒவ்வொரு சம்பவங்களுக்குப் பின்னாலும் தமிழன்ற பெருமைய கொண்டாந்து நிப்பாட்டுறாரு கஸ்தூரிராஜா

கிராமங்கள்ல அப்ப நடத்தப்பட்ட முதலிரவு ஏற்பாட்டை ஒரு இடத்துல விவரிச்சாருக்கார் ரைட்டர். அட..அட அல்டிமேட் ரகம். எனக்கு எங்கூர்ல என் நண்பனுக்கு அவனோட பெரியப்பா மகன் சொன்ன அறிவுரை ஞாபகத்துல வந்துச்சு

“என்னல பண்ணுத..வருசம் ஒன்னாயிட்டு. இந்நேரத்துக்கு ஒம்மவனோ இல்ல மவளோ ஒங்கப்பன் மார்ல ஒன்னுக்கு அடிக்காண்டாமா?”

“நாங்க சின்னப்பிள்ளிய தானப்பா. ஒன்னும் தெரியலல்லா!”

“ஒன்னும் தெரியலன்னா லைட்ட போட்டுக்க வேண்டியதானல”

“நீ ஆவே மிண்ட”
இப்படி நீண்டுக்கிண்டு போச்சு அந்த அறிவுரை

“அனுபவ பொம்பளைவ புதுப் பொம்பளைக்கு சொல்ற ஐடியாவும், அனுபவ ஆம்பளைவ புது மாப்பிள்ளைக்கு சொல்ற ஐடியாவும் அந்த வம்சத்தை வழிமாறாம தழைக்க வைக்கும் அப்பலாம். இப்ப அப்படியொரு கலாச்சாரம் இல்லாமப் போச்சு. எல்லாம் ஓப்பனா ஆச்சு.

தியாகி துரைச்சாமி வாழ்க்கைய இந்த நூல்ல படிச்ச போது பல இடங்கள்ல நெஞ்சு வெம்மிப் போச்சு

சுதந்திரம்னா காந்தி, நேர்மைன்னா காமராசருன்னு பழக்கப்பட்ட மனுசங்க நாம. ஆனா நம்மூர்ல வெளிச்சம் படாம எத்தனை காந்தியும் காமராசரும் இருக்காக..

அப்படியொரு பொறப்பு துரைச்சாமி பொறப்பு

வாழ்ற வரைக்கும் வந்தே மாதரம், காடுவரைக்கும் காமராசருன்னு வாழ்ந்த மனுசன். வெள்ளக்காரன்கிட்ட அடிபட்டு, மிதிபட்டு, கருமாயப்பட்ட ஜீவன். காமராசரு கண்ணசைச்சா கண்ணப் பிடிங்கி எறியத் துணிஞ்ச ஆளு துரைச்சாமி. சுதந்தரம் கிடைச்சதும், காமராசர் முதற்கொண்டு பெரிய ஆட்க எல்லாம் சேர்ந்து துரைச்சாமிக்கு தியாகி நிலம்னு ஒன்ன கொடுக்காக.. பத்துப்பைசா சேக்காத துரைச்சாமிக்கு அது ஒன்னு தான் சொத்து. ஊரே அவரைப் பெருமையா பார்க்குதுக. தியாகிகளுக்கு நிலம் வழங்குற மேடையில, துரைச்சாமியைப் பத்தி காமராசரு பேசுறாரு,

“இவன் மனுசனே இல்லங்கறேன். வெடிகுண்டுன்னேன்! கண்ல பாத்தாலே வெள்ளக்காரெஞ் சில்லுச்சில்லா செதறி ஒடுறாங்குறேன். இவனுக்கு இந்த நிலமா சம்மானம்ண்ட்றேன். இந்த நாடே ஒனக்குத்தாண்டா’

கரைபடாத மனுசன் வாயில வந்த வார்த்தைய வாழ்நாள் பொக்கிசமா நினைச்சு வாழ்ற மனுசன் வாழ்க்கையில வருதே இடிக.. ச்சைய்! வாசிக்க வாசிக்க ” நேர்மைக்கு பரிசு ஓர்மையை இழக்குறது தானா?” என்ற கேள்வியே வந்துட்டு.
“தரணியது அழிந்தாலும் சத்தியம் தான் அழியாதப்பா” என்று அய்யா வைகுண்டரோட வார்த்தை ஒன்னு உண்டு. எப்படியோ சத்தியம் கடைசில ஜெயிச்சிடுது

ஒருமாத காலமா வாசித்து சேர்த்தேன். ரொம்ப நிறைவாவே இருந்துச்சு. எழுத்தாளரா அறியப்பட ஆசைப்பட்டு சென்னை வந்த கஸ்தூரிராஜாவிற்கு, இயக்குநரா சாதிச்ச பிறகு ..இப்ப தமிழ் கம்பளம் விரிச்சிருக்கு. இனி நிறைய எழுதுவார்னு நம்புறேன்…

புத்தகப் பித்துப்பிடித்த எனக்கு இந்த நூலை வாங்கித் தந்த மக்கள் தொடர்பாளர்& பத்திரிகையாளர் அண்ணன் ராமானுஜம் அவர்களுக்கு நன்றி❤️🙏