Tamil Movie Ads News and Videos Portal

போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம்,“ஆபரேஷன் அரபைமா”!

பி. நடராஜன் வழங்கும் ஆபரேஷன் அரபைமா படத்தை தயாரித்து இயக்கியுள்ளார், முன்னாள் கப்பல்விடை வீரர் பிராஷ். ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் 07.03.2023  நடைபெற்றது.  விழாவில் படகுழுவினர்  கலந்து கொண்டனர்.

 

இவ்விழாவில் இயக்குநர் பிராஷ் பேசும்போது,

நேற்று என் படத்தின் ட்ரைலரை முதன் முதலாக பிரசாத் லேப் தியேட்டரில் செக் பண்ணும்போது பார்க்கையில் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டேன். ஊரில் எனது அம்மா பெயரில் ஒரு திரையரங்கம் இருந்தது. என் அப்பாவை சிலர் ஏமாற்றி விட்டார்கள். அந்த திரையரங்கத்தை அபகரித்துக்கொண்டார்கள். ஆனாலும் நான் சினிமாவை விடவில்லை. சினிமா என்னைக் கைவிடவில்லை. பெற்றோருக்கு தெரியாமல் சினிமாவை கற்றுக் கொண்டேன். இருப்பினும், கடலோர காவற்படையில் தேர்வானேன். அதிக நாட்கள் சென்னையில் தான் இருந்தேன். கப்பல்படை, விமானப்படை, தரைப்படை என மூன்று படைத்தளங்களிலும் பணியாற்றிய அதிர்ஷ்டசாலி நான் என்று நினைக்கிறேன்.

அதன் பின் ஒரு விபத்தில் சிக்கினேன். நான் அந்த விபத்திலிருந்து மீண்டு வந்ததற்கு காரணமே அப்துல் கலாம் ஐயா-வின் “விங்ஸ் ஆப் பயர்” புத்தகம் தான். அந்த புத்தகத்தை படித்துவிட்டு, நான் அப்துல் கலாம் ஐயாவை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து, அவருக்கு கடிதம் எழுதி அவரை சந்தித்தேன். அதன் பின், அவரின் வாழ்க்கையை ஒரு சுய சரிதை படமாக எனக்கு மட்டுமே அந்த உரிமையை கொடுத்தார். 2014ஆம் ஆண்டு அப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டேன். அதன் பின் சில காரணங்களால் அப்படம் இன்னும் முழுமையாக எடுக்கப்படவில்லை. அப்படத்தில் விக்ரம் சாராபாயாக “சீயான்” விக்ரம் சார் தான் நடிக்கிறார். இன்னமும் அந்த படம் உயிருடன் தான் இருக்கிறது.

போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் ஆபரேஷன் அரபைமா வாகத்தான் இருக்கும். நாம், இப்படத்தை கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் மூலம் எடுத்திருக்க முடியும். ஆனால், உண்மையான கப்பல்களை காட்டும் அழகு வராது. ஆனால், அந்த சவால்களையும் செய்துள்ளோம். கடலில் ஒரு காட்சியை படம் பிடிப்பது கடினம். கடல் சீற்றம், காற்று என அனைத்தையும் கணித்து படம் பிடிக்க வேண்டும். நாங்கள் அதை செய்துள்ளோம்.

17 லொகேஷன்களை இப்படத்தில் காட்டியுள்ளேன். நம் நாட்டிற்கு புதியதாக அறிமுகமாகவிருக்கும் போதை பொருளின் பாதிப்பை சொல்லும் படம் தான் இது.

இப்படத்தில் நாயகனுக்கு காதலிக்கவே நேரமில்லை. ஆனால், வில்லன் காதலிக்கிறார், அவருடைய தம்பி ரொமான்ஸ் செய்கிறார். நிச்சயமாக படம் உங்களுக்குப் பிடிக்கும். மற்றபடி நீங்கள் படம் பார்த்துவிட்டு சொல்லவேண்டும். அதற்காக நான் காத்திருக்கிறேன் என்றார்.