திரைக்கதை தான் ஒரு சாதாரண கதையை கூட நல்ல கதை என்று சொல்ல வைத்து ஆச்சர்யப்படுத்துகிறது. அதனால் சிறந்த திரைக்கதையோடு வரும் படங்கள் சிறந்த கதையம்சம் உள்ள படங்களாக அடையாளம் பெறுகின்றன. அந்த வகையில் ஊமைச்செந்நாய் ஓரளவு நல்ல திரைக்கதையோடு வெளியாகியிருக்கிறது
டிடெக்டிவ் வேலை செய்துவரும் ஹீரோ மைக்கேல் தங்கதுரைக்கு அந்த வேலையே பெரும் பிரச்சனையாகிறது. அதனால் தன் துணையான சனம்ஷெட்டியை இழக்கும் சூழலுக்கு உள்ளாகிறார். அவருக்கு நடக்கும் கொடுமைகளுக்குப் பின்னால் பல அரசியல் காரணங்கள் இருப்பது தெரியவர, எப்படி சூழ்ச்சியாளர்களை வதம் செய்தார் என்பதே ஊமைச்செந்நாய் படத்தின் கதை
ரொம்பவும் சைலண்டான கேரக்டர் ஹீரோ மைக்கேல் தங்கதுரைக்கு. அளவை உணர்ந்து எதார்த்தமாக நடித்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் சனம் ஷெட்டி கவனம் ஈர்க்கிறார். சேது கேரக்டரில் வரும் சாய் ராஜ்குமார் நல்ல தேர்வு.
படத்தின் பின்னணி இசை மிகத்தரமாக இருக்கிறது. ஒளிப்பதிவில் தனித்தரம் மிளிர்கிறது. முக்கியமாக க்ளைமாக்ஸ் காட்சியில் ஒளிப்பதிவாளர் கேமராத்தாண்டவம் ஆடியிருக்கிறார். நல்ல திரைக்கதை உத்தியை கையில் எடுத்த இயக்குநர் படத்தில் கதை நகரும் சூழல்களை இன்னும் பதட்டத்திற்கு உள்ளாக்கிருக்கலாம். டப்பிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கவேண்டும். சில வசனங்கள் சரியாக கன்வே ஆகவில்லை. பல இடங்களில் சம்பவங்கள் மேலோட்டமாக நடப்பதால் நம்மால் படத்தோடு கனெக்ட் ஆக முடியவில்லை. முன்பாதியை விட பின்பாதியில் நல்ல கவனம் செலுத்தி இருக்கிறார் இயக்குநர். அதனால் ஊமைச் செந்நாய் ஒருமுறை பார்க்கலாம் என்ற தரத்தில் இருக்கிறது
-மு.ஜெகன் கவிராஜ்