Tamil Movie Ads News and Videos Portal

ஒரு படம் நல்லா இருந்தால் இந்தியா முழுவதும் வெற்றி பெறும் – குஷ்பு!

ஜி குரூப் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரபஞ்சன் தயாரிப்பில், எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படம் ‘ஒன் வே’. இதில் கதையின் நாயகனாக பிரபஞ்சன் நடிக்க, கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று (அக்டோபர் 4) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை குஷ்பு, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், அகத்தியன், பேரரசு, விஜய்ஸ்ரீ ஜி, தயாரிப்பாளர் கே.ராஜன், எழுத்தாளர் கரண் கார்கி ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு பேசுகையில்,

“இன்று சின்ன படம், பெரிய படம் என்றெல்லாம் இல்லை. ஒரு படம் நல்லா இருந்தால் இந்தியா முழுவதும் வெற்றி பெறும், அதற்கான பிளாட்பார்ம் நிறைய வந்துவிட்டது. இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். காரணம், என் அண்ணனை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். அவருக்காக தான் நான் இங்கு வந்தேன். ‘ஒன் வே’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும் போது படத்தில் மிகப்பெரிய விசயம் இருக்கு என்று தெரிகிறது. படத்தில் அனைத்தும் மிக நன்றாக வந்திருக்கிறது. இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் மிக சிறப்பாக இருக்கிறது.

இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் அஷ்வினுக்கு என் வாழ்த்துகள். ஒரு படத்தின் பாடல்களை விட பின்னணி இசை தான் அந்த படத்திற்கு உயிர் கொடுக்கும். இளையராஜா சாரின் பின்னணி இசை பல படங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. அப்படி தான் இந்த படத்தின் பின்னணி இசையும் மிக சிறப்பாக உள்ளது. எந்த இடத்தில் இசை வர வேண்டும், எந்த இடத்தில் இசை இல்லாமல் மவுனமாக இருக்க வேண்டும், என்பதை அஷ்வின் மிக தெளிவாக செய்திருக்கிறார். எனவே, இந்த படம் தொழில்நுட்ப ரீதியாக தரமான படமாக இருப்பதோடு, மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் ஆரா, இயக்குநர் சக்திவேல் என அனைவருக்கும் என் வாழ்த்துகள், படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

#Oneway #ஒன் வே