Tamil Movie Ads News and Videos Portal

ஓநாய் குலச்சின்னம்- ஒரு புத்தகம்/ ஒரு பார்வை

ஓலோன்புலாக் என்றொரு மேய்ச்சல் நிலம். அந்த நிலம் ஓநாய்களால் தான் வளமை இழக்காமல் இருக்கிறது என்பது மங்கோலிய மக்களின் நம்பிக்கை. அதுவே உண்மையாகவும் இருக்கிறது. அந்த நிலத்தை வளர்ச்சி என்ற பெயரில் கையெலெடுக்க சீன அரசாங்கம் முடிவெடுக்கிறது.

விலங்குகளைப் பொறுத்தவரை இயற்கையின் தொடர்ச்சியே ஒன்றைக் கொன்று ஒன்று உயிர்வாழ்தல் தான். So எப்படியாயினும் ஓநாய்களின் இருப்பினால் தான் மேய்ச்சல் நிலம் எலிகளாலும் மான்களாலும் சூறையாடப்படாமல் இருக்கிறது. அதனால் ஓநாய்களை அழித்தொழிப்பது நிலத்திற்கு ஏற்படுத்தும் தீங்கு என்பதை உறுதியாகச் சொல்கிறார் மங்கோலிய இனத்தின் பெரியவர் பில்ஜி.

சீனாவைச் சேர்ந்த மாணவன் ஜென்சென் ஓநாய்கள் மீதான ஒவ்வாமை மனநிலையோடு பில்ஜியிடம் வருகிறான். அவனுக்கு பில்ஜி ஓநாய்களின் வாழ்க்கை முறைகள், வேட்டைச் செயல்களைச் சொல்கிறார். மேலும் ஓநாய்களின் முக்கியத்துவத்தைச் சொல்கிறார். ஜென்சென்னுக்கு இந்த மக்களின் மனதோடு இந்த நிலமும் ஓநாய்களும் எப்படி ஒன்றிப்போயுள்ளார்கள் என்பது புரிகிறது. ஓநாய்களுக்கு எதிராக நிற்க பணிக்கப்பட்டவன் ஒரு ஓநாயை எடுத்து வளர்க்கும் மனநிலைக்கு வருகிறான். ஒரு உயிரினத்தை அதன் இயல்புத்தன்மையில் இருந்து மாற்ற நினைப்பதும், அது மாறும் என நினைப்பதும் மூடத்தனம் என பில்ஜி உணர்த்தியும் கூட ஜென் ஓநாயை வளர்க்கிறான். ஜென் அந்தக் குட்டி ஓநாயை வளர்க்கும் காட்சிகள் எல்லாம் அட்டகாசமாக எழுதப்பட்டிருக்கிறது.

ஓநாய்களின் போர்த்தந்திரங்களும் அவைகளின் உச்சக்கட்ட எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு குணாம்சமும் நம்மை வியக்க வைக்கிறது. மனிதனின் நிரந்தர சொத்தாகிப் போன ஈகோ மனநிலை அஃன்றினைகளை வெல்ல விடுமா என்ன? உடலால் அழிக்க முடியாவிட்டால் இயந்திரங்களால் அழித்தொழிப்போம் அல்லவா? அப்படியொரு ஓநாய் வேட்டை நடத்தப்படுகிறது

ஓநாய் குலங்கள் அழித்தொழிக்கப் பட்டப்பின் பில்ஜி கவலைப்பட்டதைப் போலவே நிலம் பாழ்படுகிறது

இயற்கையை அதன் இயங்கியலில் விடாமல் இழுத்துப் பிடிப்பதன் மூலம் இழப்பு மனித இனத்திற்குத் தான். என்றாலும் வளர்ச்சி என்பதை எட்ட புனரமைப்பு என்பது தேவைதானே என்று அறிவியல் சொல்கிறது. இரண்டிலும் சமநிலை இருக்க வேண்டும் என்பதே நிஜம்..அந்த நிஜத்தை சீன ராணுவம் ஏற்கவில்லை. ஓலோன்புலாக் நிலத்தில் ஓநாய்களின் ரத்தம் நிரப்பப்படுகிறது

நாவலில் வியக்க வைக்கும் சம்பவங்களும், விம்ம வைக்கும் சம்பவங்களும் நிறைய உண்டு

ஓநாய்க்குட்டியை திருடுவதற்காக ஜென்னும் அவனது நண்பனும் குகைக்குள் செல்லும் போது 9 குட்டிகளை எடுக்கிறார்கள். அதில் கண் முழிக்காத ஓநாய் குட்டிகளும் உண்டு. அவற்றில் இரண்டு குட்டிகளை ஆளுக்கொன்றாக வைத்துக்கொண்டு ஜென்னின் நண்பன் மற்ற ஓநாய்க்குட்டிகளை வான் நோக்கி வீசியடிப்பான். அவை கீழே வந்து பாறைகளில் விழுந்து சாகும். ஓநாய்கள் குதிரைகள் மீதும், மான்கள் மீதும் நடத்தும் வேட்டை பயங்கரமானதாக இருப்பினும், இந்தக் குட்டிகள் சாவதை வாசிக்கையில் அந்தக் காட்சி மனதை ரணமாக்குகிறது. நாம் வளர்ப்பதால் நம் மீது குட்டி ஓநாய்க்கு எமோஷ்னல் அதிர்வு வரும் என்ற ஜென்சென்னின் நினைப்பில் மண் விழும் இடங்களும் எதார்த்தம்.

மங்கோலிய மக்களில் யாராவது இறந்தால் அவர்களின் உடலை வானை நோக்கி போட்டுவிடுகிறார்கள். அந்த உடலை பருந்துகள் அருந்தட்டும் என்கிறார்கள். அதற்கு பெயர் வான்புதை என்கிறார்கள். காலமெல்லாம் விலங்குகளைத் தின்று வாழும் நம்மை விலங்குகள் தான் தின்ன வேண்டும் என்பது அம்மக்களின் நன்றி செயல்பாட்டு வாழ்க்கை முறை

இயற்கையான சுழற்சி முறையில் கல்லெறிய வேண்டாம் என்பதை அற்புதமான பின்னணியில் வரலாற்று தகவல்களோடு பேசுகிறது ஓநாய் குலச்சின்னம். சி.மோகன் தவிர்த்து வேறு யார் மொழி பெயர்த்திருந்தாலும் நாவல் வாசிக்க இன்னும் கடினமாக இருந்திருக்கும். இந்த நாவலை ஆங்கிலத்தில் வாசித்து விட்டு, இதைத் தமிழ்படுத்த வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் வெற்றிமாறன் அதிர்வு என்ற பதிப்பகத்தை துவங்கினார் என்பது அடிஷ்னல் செய்தி

-மு.ஜெகன் கவிராஜ்