ஜில் ஜில்னு ஒரு படம் பார்த்து எவ்ளோ நாளாச்சு என்பவர்களுக்கு ஓ மை கடவுளே சூப்பர் சாய்ஸ்..
தோழி திடீர் மனைவி ஆனதால் அவள் மீது காதல் வராமல் விவகாரத்து கோருகிறார் ஹீரோ அஷோக் செல்வன். விவாகரத்து விவகாரம் கோர்ட்டில் நடக்கும் போது அங்கு ஒரு சம்பவம் நடக்க பேண்ட்ஸி முறையில் கடவுள் மற்றொரு வாய்ப்பை ஹீரோவிற்கு வழங்குகிறார். அப்புறம் என்னானது என்பது தான் ஓ மை கடவுளே.
படத்தில் வரும் கேரக்டர்களுக்கான ரைட்டிங்கில் செம்ம வீரியம் காட்டி இருக்கிறார் இயக்குநர் அஸ்வத். அஷோக்செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன், சந்தோஷ் பிரதாப், எம்.எஸ் பாஸ்கர், ஷாரா என எல்லாக் கேரக்டர்களும் எதோ ஒரு விதத்தில் படு ஸ்ட்ராங்காக இருக்கிறது. ஒவ்வொருவரின் நடிப்பையும் தனித்தனியாக பட்டியல் இட்டால் பட்டியலில் முதலிடம் ரித்திகாவிற்கே.. அஷோக் ரித்திகாவின் காதலை நிராகரிக்கும் போதும், பின் காதலாகி கசிந்துருகும் போது ரித்திகா காட்டும் பெர்பாமன்ஸ் காதல் பாக்ஸிங். அஷோக் செல்வன் எதார்த்தமாக ஈர்க்கிறார். வாணி போஜன் எமோஷ்னல் காட்சிகளில் இதயம் நுழைகிறார். எம்.எஸ் பாஸ்கர், ஷாரா நறுக் நடிப்பு. கேமியோ ரோல்போல் அல்லாமல் படத்தின் முக்கிய அம்சமாய் வரும் விஜய்சேதுபதி கேரக்டர் செம்ம தத்துவார்த்த வார்ப்பு. (கிடைக்காததுல இல்ல வாழ்க்கை. கிடைச்சதை பயன்படுத்திக்கிறதுல இருக்கு லைப். இந்த டயலாக்கை சொல்லாமலே புரிய வைக்குது அவர் கேரக்டர்! செம்ம)
லியோன் ஜேம்ஸின் இசை, விது ஐய்யன்னாவின் கேமரா இரண்டும் 2K கிட்ஸை கொண்டாட வைக்கும் அளவில் உழைத்துள்ளது. முன்பாதி பின்பாதி இரண்டு பாதியிலும் சில கட்டிங்ஸை கொடுத்து படத்தை இன்னும் ஷார்ப்பாக்கி இருக்கலாம். படத்தின் திரைக்கதையில் இருக்கும் முக்கிய அழகே அங்காங்கே உள்ள துண்டு துண்டு சீன்களுக்கும் சரியான பினிஷிங் கொடுத்தது தான். காதல்ல லாஜிக் கிடையாது மேஜிக் மட்டும் தான். அதை மாதிரி இந்த காதல் படத்திலும் நமக்கு லாஜிக் பார்க்க தோணவே இல்லை. யெஸ் ஓ மை கடவுளே ஒரு அட்டகாச மேஜிக். லவ்வர்ஸுக்கு மட்டும் அல்ல..எப்போதும் லவ்வோட இருக்குற எல்லாத்துக்குமே நல்ல விருந்து கொண்டாடுங்க மக்களே!
-மு.ஜெகன்சேட்