Tamil Movie Ads News and Videos Portal

Oh my dog- விமர்சனம்

உடல் குறைபாடுள்ள ஓர் உயிரினத்தை ஒதுக்கி வைத்தலும் சிதைத்து கொல்வதும் பெரும்பாவம் என்பதை படம் முதலிலே சொல்லி விடுகிறது. பார்வைத் திறன் இல்லாத நாய்குட்டி ஒன்றை கொலை செய்யச் சொல்கிறார் நாய்களை வளர்த்து போட்டிகளுக்கு அனுப்பி வெற்றிகளை குவிக்கும் வில்லன் வினய். வினயின் அடியாட்கள்? இருவர் அந்த நாய்குட்டியை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்கும் நாய் அருண்விஜய் மகன் ஆர்னவ் விஜய்யிடம் வருகிறது. ஒரு கட்டத்தில் அந்த நாய் வில்லன் வினய்க்கு வினையாக வந்து நிற்க, அடுத்தடுத்து என்ன நடக்கிறது? என்பது தான் Oh my dog

ஒரு வீட்டில் உள்ள மூன்று தலைமுறை நடிகர்கள் படத்தில் நடித்துள்ளது தமிழ்சினிமாவிற்கு புதுசு. விஜயகுமார் ரோல் சிறியது என்றாலும் ஓரிரு காட்சிகளில் அழகாக ஸ்கோர் செய்து விடுகிறார். அருண்விஜய் மிடில் க்ளாஸ் வறுமையை கடக்கும் காட்சிகளில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். அவருக்காகவே குட்டியாக ஒரு பைட் சீக்வென்ஸும் இருக்கிறது. ஆர்னவ் விஜய் நாய்குட்டியோடு உள்ளார்ந்த அன்பு காட்டும் காட்சிகளில் மனதில் நிறைகிறார். க்ளைமாக்ஸில் ஆர்னவ் விஜய் அப்பாவைப் பெருமிதப்படுத்தும் விதத்தில் பிரமாதப்படுத்தி விடுகிறார். அருண்விஜயின் மனைவி கேரக்டரும் நச் தேர்வு. வில்லன் வினய் கேரக்டரை இன்னும் மெருகேற்றியிருக்கலாம். அவரும் இன்னும் எஃபெக்ட் கொடுத்து நடித்திருக்கலாம்

ஊட்டியில் எங்கு கேமரா வைத்தாலும் அழகாக இருக்கும் என்றாலும் லொகேஷன் தேர்வை கச்சிதமாக கையாண்டுள்ளனர். ஒளிப்பதிவு போலவே பாடல்கள் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு போதுமான பலம். நாய்களுக்கான போட்டியில் மேலும் பிரம்மாண்டம் காட்டியிருக்கலாம் என்று தோன்றியது

ஒரு பார்வையற்ற உயிரினம் உலகமே வியந்து பார்க்கும் வகையில் முன்னேறுகிறது. அதற்குப் பின்னால் ஒரு சிறுவனின் பேரன்பும் பெரும் முயற்சியும் இருக்கிறது என்ற ஒன்லைனே படம் மீது நம்மை மையல் கொள்ளச் செய்கிறது. ஆகையால், பெரிதாக இல்லாமல் சிறிதாக மட்டுமே எடுபடும் எமோஷ்னல், சற்று மெதுவாக நகரும் திரைக்கதை, யூகிக்கக் கூடிய கதை சொல்லல் ஆகிய சிற்சில குறைபாடுகள் இருந்தாலும், இப்படத்தை கொண்டாட தோன்றுகிறது. நிச்சயமாக குழந்தைகளுக்கான சம்மர் கிப்ட் இப்படம். துளியும் ஆபாசம் இல்லாத இந்தப்படத்தை சகிதம் அமர்ந்து ஜாலியாகப் பார்க்கலாம்.

அறமும் தரமும் இரண்டு கண்களென செயல்பட்டு நல்ல படங்களைத் தரும் 2D Entertainment நிறுவனத்திற்கு Oh my dog மேலும் ஒரு வெற்றிப்படம்

-மு.ஜெகன் கவிராஜ்