துண்டுச் சீட்டில் எழுதிவிடக்கூடிய ஒருவரி கதை தான் இந்த O2. ஆனால் கூடுமான வரை ஓகோ என்று சொல்ல வைக்கும் அளவில் நல்ல படைப்பாக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ்
நாயகி நயன்தாரா செயற்கை ஆக்சிஷன் வழியாக உயிர்வாழும் தனது மகனை கோவையில் இருந்து கொச்சினுக்கு உயர்சிகிச்சைக்காக தனியார் பேருந்தில் அழைத்துச் செல்கிறார். கொச்சின் செல்லும் பேருந்து மண்சரிவில் சிக்க..புதைந்து போன பேருந்துக்குள் மூச்சைப் பிடித்தபடி நயன் அவர் மகன் உள்பட சிலர் மாட்டிக்கொள்ள..ஒருபுறம் மீட்புக்கான போராட்டமும், ஒருபுறம் மூச்சுக்கான போராட்டமும் நடைபெறுகிறது. அடுத்து மகனை காப்பாற்ற நயன் என்னவெல்லாம் செய்கிறார் என்பதே O2 கதை
நயனுக்கு அறம் படத்தின் நடிப்பை காபிபேஸ்ட் செய்யும் வேலைதான். அதைச் சிறப்பாக செய்துள்ளார். செயற்கை சுவாசத்தைக் கொண்டு வாழும் சிறுவனாக நடித்துள்ள ரித்விக் சரியான தேர்வு. சில இடங்களில் பரிதாபத்தை அள்ளுகிறார். பேருந்துக்குள் பயணிக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திர தேர்வை வடிவமைத்த விதத்தில் இயக்குநர் கவனிக்க வைக்கிறார்.
படத்தின் பெரிய பலம் கேமராமேனின் உழைப்பு தான். ஒரு பஸுக்குள் சுருங்கி நிற்கும் கதையை கூடுமான வரை வெவ்வேறு லைட் செட்டிங், வெவ்வேறு கோணங்கள் என காட்டியிருக்கிறார். பின்னணி இசையும் ஒரு நல்ல திரில்லருக்கான மூட்-ஐ கொடுக்கிறது
எடிட்டிங் டேபிளில் படம் ஷார்ப் ஆகியிருப்பது இன்னும் சிறப்பு
இயற்கைக்கு எதிராக மனிதனின் செயற்கைச் செயல்பாடுகள் அதிகமாகும் போது இயற்கைத் தன்னைத் தக்க வைக்க எதுவும் செய்யும் என்ற மெசேஜை மைல்டாக படத்தில் தூவியிருப்பது சூப்பர். இந்தப் படத்தை ஒரு ரசிகராக வெளியில் இருந்து பார்க்கும் போது Feel ok தான். but படத்தின் கதாப்பாத்திரங்களோடு நம்மையும் சேர்த்துக் கொள்ள வைத்திருக்கலாம். அந்த வித்தையை இயக்குநர் செம்மையாக செய்திருக்கலாம். அறம் படத்தில் அந்த கேரக்டர்ஸ் நெருக்கம் நமக்குள் இருந்தது. இந்த O2-வில் இது மட்டும் தான் குறை. மற்றபடி மேக்கிங், என்கேஜிங் என்பதில் படம் ஒரு பக்கா பேக்கேஜ் தான். அதனால் ஹாட்ஸ்டாரில் இருக்கும் O2-வை ஒரு தட்டு தட்டலாம்
-மு.ஜெகன் கவிராஜ்