ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான பிரசன்னா, நாயகனாக நடித்ததோடு மட்டுமின்றி நெகட்டிவ்வான கதாபாத்திரத்திலும் நடித்து முத்திரைப் பதித்தார். அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த ‘முரண்’, ‘அஞ்சாதே’ ‘திருட்டுப் பயலே’ போன்ற திரைப்படங்கள் அவரின் நடிப்பிற்காக பெரிதும் வரவேற்க்கப்பட்டது. தற்போது இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்து வரும் ‘வலிமை திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடிக்கவிருக்கிறார் என்கின்ற தகவல் கடந்த சில நாட்களாக வலைதளங்களில் உலவியது.
இந்தத் தகவல் குறித்து முதன்முறையாக வாய் திறந்திருக்கும் பிரசன்னா, “வலிமை திரைப்படத்தில் நான் இடம் பெறவேண்டும் என்பதான உங்களின் அன்பு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. நானும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும், அதை மகிழ்ச்சியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால் இந்த முறை அந்த வாய்ப்பு கை நழுவிப் போய்விட்டது. கண்டிப்பாக எல்லாவற்றிலும் மற்றொரு வாய்ப்பு உண்டு. அதனால் தல “அஜீத்’ உடன் நடிக்க மற்றொரு வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புகிறேன். வலிமை-யில் நான் இல்லை என்பதை தாங்கிக் கொள்ள என் மனதிற்கு வலிமை வேண்டும். அந்த வலிமையை உங்கள் அன்பு எனக்குக் கொடுக்கும் என்று நம்புகிறேன்..” என்று தெரிவித்துள்ளார்.