விட்டுக்கொடுத்தலும் ஏற்றுக்கொள்ளுதலும் தான் வாழ்வை வரமாக மாற்றும் அருங்காரணிகள் என்பதைச் சொல்கிறது நித்தம் ஒரு வானம்
கவிதை போல துவங்கும் கதையைச் சுருக்கமாகப் பார்க்கலாம். அசோக்செல்வன் மிகுந்த வாசிப்பும், சிறந்த டிசிப்ளினும் உள்ள ஒருவர். தன் போலே மற்றவரும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் கேரக்டர் அவர். தன் போக்கில் வாழ்வை வளைக்க முடியாது என்ற நிஜம் ஒருமுறை அவரை மனதில் அடித்துவிட, மருத்துவரை நாடுகிறார். மருத்துவர் அபிராமி தான் எழுதிய கதைகள் இரண்டைக் கொடுக்கிறார். கதைகளை வாசித்தால் அவற்றில் உள்ள கேரக்டராகவே மாறிவிடும், அசோக்செல்வன் அவ்விரண்டு கதைகளின் கேரக்டர்களாக மாறுகிறார். இரண்டு கதைகளுக்கும் முடிவு என்னவென தெரியாமல் இருக்க, முடிவை அறிந்துகொள்ள அபிராமியிடம் செல்கிறார். அபிராமி, “இது கதையல்ல நிஜம். இதன் முடிவை நீ தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், கதையில் உள்ளவர்களை நேரில் சந்தித்துத் தெரிந்துகொள்” என்கிறார். உடனே அசோக்செல்வன் கிளம்புகிறார். தனியாகவா? இல்ல ஸ்வீட்டி ரிதுவர்மாவோடு! அந்தப்பயணம் எப்படியான முடிவை எட்டியது என்பதே நித்தம் ஒரு வானம்
அலட்டல் இல்லாத நடிப்பால் அப்ளாஸை அள்ளுகிறார் அசோக்செல்வன். படத்தில் உள்ள பல நாயகிகளில் ரிதுவர்மாவை விட ஸ்கோர் செய்வது சற்று நேரமே வந்தாலும், அபர்ணா பலமுரளியும், ஷிவாத்மிகாவும் தான். அசத்தியிருக்கிறார்கள். மருத்துவராக வரும் அபிராமி ஆச்சர்ய சர்ப்ரைஸ்! சின்னச் சின்ன வசனங்களிலும் அவர் காட்டியுள்ள நடிப்பு அட சொல்ல வைக்கிறது. அழகம் பெருமாள், காளிவெங்கட் இருவரும் கொடுத்த வேலையை நிறைவாகச் செய்துள்ளார்கள்
மனத்தூய்மையின் வாசல் எதார்த்தத்தை உணர்வதில் தான் இருக்கிறதை என்பது கவித்துமாக சொல்லிய விதத்தில் கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக். அவரின் உளவியல் மாற்ற முயற்சியான இப்படத்திற்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்துள்ளனர் பாடல்களுக்கு இசை அமைத்த கோபி சுந்தரும், பின்னணி இசை அமைத்த தரண்குமாரும், ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா கதைப் பயணிக்கும் நிலப்பரப்பிற்கு நம் கண்களை தன் கேமராக்கண்களால் அழைத்துச் சென்றுள்ளார். சபாஷ்! அந்தோணியின் படக்கோர்வை எங்குமே நம்மை சோர்வடைய விடாமல் பார்த்துக்கொள்கிறது
ஒருகதையை மையப்படுத்தி அதன் சரடில் இரு கதைகள் எனப்பயணிக்கிறது படம். பின்பாதியில் நம் நெஞ்சோடு ஒட்டி உறவாடிய காட்சிகளைப் போல் முன்பாதியில் வரும் காட்சிகளையும் இயக்குநர் அமைத்திருக்கலாம். ஆனாலும் நிலையில்லா மனிதவாழ்வை ஓரளவாவது அறம் சார்ந்து அன்பு கூர்ந்து அர்த்தப்படுத்துங்கள் என்று சொன்ன வகையில் நித்தம் ஒரு வானம் கவனிக்கப்பட வேண்டிய சினிமா
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்
#NithamOruVaanam #நித்தம்ஒருவானம்