நெஞ்சின் மீதமர்ந்து வாழ்நாளெல்லாம் வாசம் வீசும் ஒரே நினைவு காதல் நினைவு தான். இழந்த காதலும் சரி, இருக்கும் காதலும் சரி மனதை அழகாக்கும் தன்மையுடையது. அப்படியான காதலை மையப்படுத்தி வெளியாகியுள்ள படம் நினைவெல்லாம் நீயடா. கவிதை போன்ற இப்படம் கவிதையாக இருக்கிறதா?
ஹீரோ ப்ரஜனுக்கு தன் பள்ளிக்கால காதலியை மறக்கவே முடியவில்லை. திருமண வயதை எட்டிய பிறகும் பள்ளிப்படிப்பை முடித்து அமெரிக்கா சென்று செட்டிலாகிவிட்ட தன் காதலியையே நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் ப்ரஜனை மனிஷா யாதவ் தீவிரமாக காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களுக்கு திருமணமும் நடந்துவிடுகிறது. இந்நிலையில் அமெரிக்கா சென்ற பள்ளிக்கால காதலி திரும்பி வந்து ப்ரஜனைச் சந்திக்கிறார்? வந்தவர் ப்ரஜனை திருமணம் செய்ய வந்திருப்பதாகச் சொல்ல, அடுத்தடுத்த திருப்பங்கள் தான் படத்தின் கதை
கதையின் நாயகனாக படத்திற்குள் தன்னைப் பொருத்திக்கொண்டு முழுமையான நடிப்பைக் கொடுத்துள்ளார் ப்ரஜன். மனிஷா யாதவ் ஒருபடி மேலே சென்று அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். மறைந்த மனோபாலா ஆங்காங்கே காமெடி செய்து படத்தை கலகலப்பாக்க உதவியுள்ளார். ஹீரோ ஹீரோயினின் பள்ளிக்கால போர்ஷனில் நடித்தவர்கள் அட்டகாசமான தேர்வு. அருமையாக நடித்துள்ளனர்
இசைஞானி இளையராஜா இசையில் இருபாடல்கள் ரிப்பீட் மோட். பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் சிக்கமான லொக்கேசனைக் கூட பிரம்மாண்டமாக காட்டி அசத்தியுள்ளார். ஒரு நல்ல காதல் கதைக்கான ரைட்டிங்-ஐ கொடுத்துள்ளார் இயக்குநர் ஆதிராஜன்
ரத்தம் சொட்டும் வன்முறை நிறைந்த சினிமாக்களுக்கு மத்தியில் மென்மையான காதலைப் பேசும் படம் இது. படத்தின் பாடுபொருள் காதல் என்பதால் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனும் தனக்குள் மூழ்கியிருக்கும் காதல் நினைவுக்குள் சென்று மகிழ்வான். அந்த வகையில் இந்த நினைவெல்லாம் நீயடா படம் நம் நினைவிற்குள் நிற்கிறது
3/5
-மு.ஜெகன் கவிராஜ்