கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒரு தலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யோகி பாபு. அப்படத்தில் இடம் பெற்ற ”ஒன் பின்னால சுத்துறேன்” பாடலும் படு ஹிட்டானது. அப்பாடல் முழுவதும் நயனின் பின்னால் சுற்றிக் கொண்டே இருப்பார் யோகி பாபு, இப்பொழுதும் அதுபோல் நயனின் பின்னால் சுற்றத் தொடங்கியிருக்கிறார். ஆனால் இப்பொழுது காரணம் வேறு. சமீபத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற “கோமாளி’ படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி விரைவில் யோகி பாபு படம் இயக்குவார் என்று தெரிவித்தது நினைவு இருக்கலாம்.
உண்மையாகவே படம் இயக்கும் பணியில் இறங்கிவிட்டார் யோகி பாபு. எஸ்.பி செளத்ரியின் 18ரீல் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை இயக்கவிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் இப்படத்தில் நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்க முயன்று வருகிறாராம் யோகி பாபு. அவர் மறுக்கும்பட்சத்தில் காஜல் அகர்வாலை நடிக்க வைக்க திட்டமிருப்பதாகவும் தெரிகிறது. தற்போது நயன்தாரா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலும், ‘நெற்றிக்கண்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.