எப்போதும் பூக்கும் பூக்களில் நாம் காதல் படங்களையும் சேர்க்கலாம். காதலுக்கு மட்டும் ஆல்வேஸ் ஒரே ட்ரெண்ட் தான். பட் அந்தக் காதலுக்குப் பின்னால் கதைகளும் வலிகளும் யார் யாரை காதலிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும். அந்த மாறுபாட்டை, மாறுபட்ட கோணத்தில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்
ஒரு காதல் ஜோடியின் ஊடலோடு துவங்கும் படம் ஒரு காதல் சம்பந்தப்பட்ட மேடை நாடக பயிற்சியின் வழியாக தீர்க்கமான உரையாடலோடு பயணிக்கிறது. முடிவில் இன்றைய காதலுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன என்பதையும், இன்றைய காதல்களின் நவீன எதார்த்தத்தையும் பேசி முடிக்கிறது படம்
படத்தில் கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் மட்டும் ஸ்கோர் செய்யவில்லை. எந்நேரமும் பாத்திரம் மட்டுமே துலக்கும் ஒரு துண்டு கேரக்டர் கூட அவ்வளவு அழகாக நடித்திருக்கிறது. பா.ரஞ்சித் படங்களில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இப்படத்தில் ட்ரான்ஸ் வுமனுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்! சபாஷ் தோழர்!
டென்மாவின் இசையில் புரிகின்ற பாடல்களும் அதிர்கின்ற பின்னணி இசையும் அழகாக அமைந்துள்ளது. கிஷோர்குமாரின் ஒளிப்பதிவு படத்தை நாடக பாணியில் காட்டினாலும் அதுதான் கதையின் சாரம் என்பதால் காண்பதற்கு அழகாக இருக்கிறது
நட்சத்திரம் நகர்கிறது படமும் ஜாதி அரசியலைத் தான் பேசுகிறது. ஆனால் அதை அக்மார்க் கலை நேர்த்தியோடும் நேர்மையோடும் பேசுகிறது. ஓரின ஈர்ப்பாளர்கள் பற்றி இவ்வளவு மெச்சூடாக யாருமே பேசவில்லை. மேலும் சமீபகால ஆணவக்கொலைகளை டேரிங்காக பேசியிருக்கிறார் ரஞ்சித். படத்தின் ஆழம் படத்தை காப்பாற்றினாலும் நீளம் சற்று சோர்வடைய வைக்கிறது. பா.ரஞ்சித் படங்களில் இந்தப்படம் வித்தியாசமான முயற்சி. அவசியம் பார்க்கலாம்
4/5
-மு.ஜெகன் கவிராஜ்
#NatchathiramNagargiradhu #நட்சத்திரம் நகர்கிறது