Tamil Movie Ads News and Videos Portal

நரவேட்டை -ஒரு புத்தகம்/ஒரு பார்வை

“மிருகத்தை வேட்டையாடும் போது மனிதனாக இருப்பவன், சாதி விவகாரத்தில் மனிதனை வேட்டையாடும் போது மிருகமாக மாறிவிடுகிறான்”. சாதிவெறியால் நடந்த, நடக்கும் மனிதவேட்டையை மையப்படுத்திய நாவல். 90-களில் நடக்கிறது கதை.

தேவன்பட்டி, சேவகச்சேரி எனும் இரண்டு ஊர்களை களமாக கொண்டுள்ள கதையில், கண்ணன் பொன்னியின் காதல் பிரதானமாக இருக்கிறது. சாதி துறந்த காதலை நோக்கி இவர்கள் வளர்த்துச் செல்லும் உறவு வாசிக்க வாசிக்க இன்பமாக இருந்தாலும், ‘அந்தக் கொடுமை’ எப்போது நடக்குமோ என்ற பதட்டத்தை உண்டு பண்ணுகிறது. சக்தி சூர்யாவின் எழுத்து அவ்வளவு அழுத்தமாக அமைந்துள்ளது

மையக்கதையை நோக்கி மட்டும் நகராமல் அவ்வப்போது, வேறு செய்திகளை விவரித்துச் சொல்லும் நாவல், வெகுசில இடங்களில் செயற்கை உணர்ச்சிகளையும் கொட்டுகிறது

ஆதிக்கச் சாதியில் முருகன் எனும் கேரக்டர், நாவலின் முடிவின் போது இடதுசாரி இயக்க இளைஞனாக மாறி, கண்ணன், பொன்னி ஆன்மாவிற்கு நியாயம் தேட போராடும் இடம் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.

கொடும் பஞ்ச காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் சொந்த வயலில், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள், நெல்லை அறுத்து கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளையர்களில் ஒருவனை தாழ்த்தப்பட்ட மக்கள் பிடித்து கட்டி வைக்கிறார்கள். ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பெரிய மனிதர்கள் எல்லோரும் பஞ்சாயத்து பேச வருகிறார்கள்.

“களவாண்டது தப்பு தான். எதோ வயத்துப்பாட்டுக்காக பண்ணிட்டான்”என்று சமாதானத்துக்கு அழைக்கிறது ஆதிக்கச்சாதி. ஒடுக்கப்பட்டவர்கள் விடுவதாயில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு தீர்ப்பைச் சொல்கிறார்கள். அதாவது, “திருடியவன் ஆயிரம் ரூபாய் அபாராதம் கட்ட வேண்டும். ஊர் முன்னாடி விழுந்து கும்பிட வேண்டும்” என்பதே தீர்ப்பு

ஆதிக்கச்சாதி அரண்டுபோகிறது. ₹200 ரூபாய் அபராதம் கட்டுகிறோம். ஆனால் விழுந்து மட்டும் கும்பிட மாட்டோம் என்கிறது. விவகாரம் வளர்கிறது. முடிவில் அறத்தின் முன்பு ஆணவம் விழுந்து வணங்குவதாய் அந்த சீக்வென்ஸ் முடிகிறது. நாவலில் மிகவும் பிடித்த இடம் இது. ரொம்பவும் நுட்பமாக சாதிய மனவெறியை அலசியிருந்தார் எழுத்தாளர்

அதேபோல் ஒகிலித்தாத்தா கேரக்டரை அமைத்த விதமும் சிறப்பு. ஊருக்கு ஊர் இப்படியான தாத்தாக்கள் இருப்பது அவசியமும் கூட. கிராம வாழ்க்கை என்றால் சொர்க்கம் என்பார்கள். ஆனால் அங்கும் மனுசங்க தான வாழ்றாங்க.

90-களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சமூகநீதியை வலியுறுத்திய முன்னெடுப்புகளை நாவல் கதையினூடே குறிப்பிட்டுள்ளது.

கொஞ்சமேனும் பழைய நெடி அடித்தாலும், காத்திரமான பாத்திரங்களை கொண்டிப்பதால் சிறப்பான நாவல்

முக்கியக் குறிப்பு: நாவலில் நிறைய இடங்களில் ‘தாழ்ந்த சாதி’ என்ற வார்த்தைப் பிரயோகம் இருக்கிறது. அதை, ‘தாழ்த்தப்பட்ட சாதி’ என்று குறிப்பிடுவதில் என்ன தயக்கம்?