Tamil Movie Ads News and Videos Portal

கொரோனாவால் உயிர் பெற்ற நரகாசுரன்

உலகெங்கும் பல்லாயிரம் உயிர்களை காவு வாங்கியிருக்கும் கொரோனா வைரஸ் மூலம் நரகாசுரன் உயிர் பெற்றுள்ளான். இந்த நரகாசுரன் ராம அவதாரத்தினால் பலியான இதிகாச நரகாசுரன் இல்லை. கெளதம் மேனனின் பொருளாதார தட்டுப்பாட்டினால் உயிரிழந்த கலிகால நரகாசுரன். ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் மக்களை கவர்ந்த இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘நரகாசுரன்’. இப்படத்தை இயக்குநர் கெளதம் மேனன் தயாரித்திருந்தார். ஆனால் அவர் பொருளாதாரச் சிக்கல்களில் சிக்கியதால் அப்படத்தை ஓராண்டுக்கும் மேலாக ரீலிஸ் செய்யமுடியாமல் திணறி வருகிறார்.

இப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருந்த கார்த்திக் நரேன் பொறுமையிழந்து போனவராக ‘நாடகமேடை’ என்ற படத்தை அறிவித்தார். ஆனால் அப்படம் தொடங்கப்படவில்லை. பின்னர் லைகா புரொடெக்ஷனில் ‘மாபியா’ படத்தை இயக்கி அப்படம் சிலவாரங்களுக்கு முன்னர் வெளியாகிவிட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் கோடிக்கணக்கான மக்கள் வீட்டில் முடங்கி இருக்கும் இந்த நேரத்தில் ‘நரகாசுரன்’ படத்தை ஓடிடி ப்ளாட்பார்ம் மூலம் வெளியிட கெளதம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. புதிய படங்களைப் பார்க்க மக்கள் ஆர்வமாக இருப்பதால், இது இப்படத்தினை வியாபாரம் செய்ய சரியான நேரம் என்று கெளதம் நினைக்கிறாராம். நிலைமை சரியானதும் திரைப்படத்தை மீண்டும் திரையரங்கில் வெளியிடுவது தொடர்பாகவும் யோசித்து வருகிறாராம்.