Tamil Movie Ads News and Videos Portal

நந்திவர்மன்- விமர்சனம்

கற்பனையான சரித்திர பின்னணியில் ஒரு சமகால கதை

ஆறாம் நூற்றாண்டில் நந்திவர்மன் செஞ்சி அருகே ஒரு கோயிலை நிர்மானித்ததாகவும், அந்தக் கோயில் தற்போது பூமிக்குள் புதையுண்டு போயிருப்பதாகவும், அந்தப்புதையுண்ட கோயிலுக்குள் விலை மதிப்பற்ற பொன்களும், சிலைகளும் இருப்பதாகவும் தொல்லியல் துறை ஆய்வு செய்ய முற்படுகிறது. ஆய்வு நடக்கும் போது சில கொலைகள் அமானுஷ்யமான முறையில் நடைபெறுகிறது. ஆய்வுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் அதிகாரியான ஹீரோ களத்திற்கு வருகிறார். அதன்பின் நடக்கும் பரபர சம்பவங்கள் தான் படத்தின் கதை

ஹீரோ சுரேஷ் ரவிக்கு உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தும் லாவகம் இப்படத்தில் கூடிவரவில்லை. காதல் காட்சிகளிலும் அவர் ஜொலிக்கவில்லை. ஆஷா வெங்கடேஷ் அழகாக இருக்கிறார். கொடுத்த கேரக்டர்க்கு குறைவின்றி நடித்துள்ளார். போஸ் வெங்கட் மட்டுமே தன் கேரக்டரை முழுமையாக உள்வாங்கி அசத்தியுள்ளார். ஆடுகளம் முருகதாஸ், கோதண்டம் ஆகியோர் சின்னதாக கவனம் ஈர்க்கிறார்கள். கஜராஜ், நிழல்கள் ரவி கேரக்டர்கள் பெரிதாக வொர்க்கவுட் ஆகவில்லை

ஜெரார்ட் பெலிக்ஸ் இசையில் பாடல்கள் பின்னணி இசை இரண்டும் ஒகே ரகம். எடிட்டர் சான் லோகேஷ் இன்னும் புட்டேஜை இறுக்கிப் பிடித்திருக்கலாம். சேயோன் முத்துவின் ஒளிப்பதிவு நல்ல விஷுவலை கொண்டு வந்திருக்கிறது. வரைகலை பரவாயில்லை ரகம்

ஒரு ஊருக்குள் புதையுண்ட கோவில், அதை ஆய்வு செய்யும் நேரத்தில் தொடர் மரணங்கள் என நல்ல தொடக்கத்தோடு துவங்கிய படம் இரண்டாம் பாதியில் தெவங்கிவிட்டது. படத்தில் எந்த எமோஷ்னலும் கூடிவரவில்லை. சில கேரக்டர்களின் செயற்கையான நடிப்பும் சீரற்ற திரைக்கதையும் படத்தை நம்மோடு ஒன்ற விடவில்லை. நல்ல உத்வேகத்தோடு இந்தக் கதையை அணுகியிருந்தால் இந்த நந்திவர்மன் நம் நெஞ்சில் நிலைத்திருப்பான்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்