நான் தமிழில் பேசட்டுமா..? கேள்வியெழுப்பிய டாப்ஸி..!?
கோவாவில் உலகத் திரைப்படவிழா நடைபெற்று வருகிறது. இதில் இந்திய திரையுலகைச் சேர்ந்த பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு வருகின்றனர். ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிங்க் திரைப்படத்தின் மூலம் இந்தித் திரையுலகிலும் தவிர்க்கமுடியாத முன்னணி நடிகையாக மாறி இருக்கும் நடிகை டாப்ஸி பானுவும் இப்படவிழாவில் கலந்து கொண்டுள்ளார். நிருபர்களுடனான கேள்வி பதில் நிகழ்வில் அவர் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் பதில் அளித்து வந்தார். அதற்கு அங்கிருந்த ஒருவர் ஹிந்தி திரைப்படங்களில் தானே நடிக்கிறீர்கள். ஹிந்தியில் பேசுங்கள் என்று கூறினார். இதனால் சற்று கோபமான டாப்ஸி, அரங்கில் இருந்தவர்களைப் பார்த்து, “இங்கு எத்தனை பேருக்கு ஹிந்தி தெரியும்..?” என்று கேள்வி எழுப்பினார். அங்கிருந்த பலர் தங்களுக்குத் தெரியாது என்று கையுயர்த்த, “நான் ஹிந்தி திரைப்படங்களில் மட்டும் நடிக்கவில்லை; என்னை கதாநாயகியாக ஆக்கியது தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் தான்; நான் வேண்டுமானால் தமிழில் பேசட்டுமா..? என்று பதிலடி கொடுத்தார். உடனே அரங்கில் அமைதி நிலவியது. தொடர்ந்த அவர், “உலகத்தரம் வாய்ந்த படவிழாவை காண வந்திருக்கும் உங்களிடம் இருந்து நான் இன்னும் முதிர்ச்சியான கேள்விகளை எதிர்பார்க்கிறேன்..” என்று தனது பேச்சைத் தொடர்ந்தார். மேலும் தனது பேச்சில் ஒரு போதும் தென்னிந்திய மொழிப் படங்களை விட்டு விலக விரும்பவில்லை. தொடர்ச்சியாக அந்த மொழிப்படங்களிலும் நடிப்பேன்.” என்று கூறியுள்ளார்.
சித்தார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் “டக்கர்”
இயக்குநர் ஷங்கரின் உதவியாளர்களில் ஒருவரான ஜி.கிரிஷ் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியானத் திரைப்படம் “கப்பல்”. வைபவ் நாயகனாக நடித்திருந்தார். இப்படத்தை தயாரித்த சுதன் மற்றும் ஜெயராம் இருவரும் ஜி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்திருக்கும் “டக்கர்’ என்ற படத்தையும் தயாரித்து முடித்திருக்கின்றனர். இப்படம் தொடர்பான எந்தவொரு தகவலும் வெளியாகாமல் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் நடந்து முடிந்திருக்கிறது. ஜி.கிரிஷ் சித்தார்த் நடிப்பில் “சைத்தான் கி பச்சா” என்கின்ற படத்தைத் தான் எடுத்துக் கொண்டிருந்தார். அப்படப்பிடிப்பின் இடைவெளியில் ஒரு நல்ல ஒன் லைனர் கிடைக்கவும் அதை சித்தார்த்திடம் பகிர்ந்திருக்கிறார். உடனே அதன் முழு ஸ்கிரிப்டையும் எழுதி முடிக்கும்படி சித்தார்த் கூறவே, ஸ்கிரிப்டையும் எழுதி முடித்து படப்பிடிப்பையும் நடத்தி முடித்திருக்கின்றனர். மஜிலி என்ற தெலுங்குப் படத்தில் நாயகியாக நடித்த திவ்யான்ஷா கவுசிக் நாயகியாக நடிக்க, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். வாஞ்சிநாதன் முருகேஷன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படம் வெகு விரைவில் வெளியாகவிருக்கிறது.