Tamil Movie Ads News and Videos Portal

நள்ளிரவில் சுதந்திரம்-ஒரு புத்தகம்/ ஒரு பார்வை

பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக பொறுப்பேற்க மவுண்ட் பேட்டன் வருவதில் இருந்து புத்தகம் நமக்குள் பரவுகிறது..

சுதந்திரத்தின் முந்தைய நாட்களின் அரசியல் காட்சிகள் அத்தனையையும் மிக நுட்பமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். டொமினிக் லேப்பியர்& லேரி காலின்ஸ். தமிழ்மொழி பெயர்ப்பில் அசத்தியிருக்கிறார்கள்
வி.என்.ராகவன்& மயிலை பாலு

பாகிஸ்தானைப் பெற்றே தீருவது என்று ஜின்னாவும், அது வேண்டாம் என காந்தியும் மல்லுக்கட்டுவதைக் கண்டு, இந்நாடு சுதந்ததிரத்திற்குப் பின் மனித வேட்டைக்காடாக மாறும் காட்சிகள் மவுண்ட் பேட்டன் கண்முன்னே விரிகிறது. அது நடக்கவும் செய்கிறது. காந்தி சுதந்ததிரத்திற்காக அயல் நாட்டவனிடம் பட்ட கஷ்டத்தை விட, சுதந்திரத்திற்குப் பின் நம் நாட்டவரிடம் பட்ட கஷ்டமே அதிகம் என்பது போன்ற விவரணைகள் மலைப்பை ஏற்படுத்தியது.

நூலை பாதி கடக்கையில் மவுண்ட் பேட்டனை ஹீரோவாக முன்னுறுத்தும் நூல் என்ற முடிவுக்கு வந்தேன். சுதந்திரம் பெற்றபின் மவுண்ட் பேட்டன் ஊரைக்காலி பண்ணிச் செல்கிறார். அதன்பின் நாடு மதக்கலவரங்களால் சின்னாபின்னாமாகிறது. பஞ்சாப், கல்கத்தா, டெல்லி என பற்றி எரிகிறது . நேரு, படேல் கூட்டணி, மீண்டும் மவுண்ட் பேட்டனை அழைக்கிறது. “இனி இது உங்கள் நாடு உங்கள் பாடு” என மவுண்ட் பேட்டன் மறுக்கிறார். அதற்கு நேரு கொடுக்கும் விளக்கம் உருக்கும் ரகம்

“நாங்கள் அடிமை என்ற நிலையிலே இதுகாறும் இருந்து வந்தவர்கள். முதன்முதலாக பெற்றிருக்கும் அதிகாரத்தை எங்களால் பயன்படுத்தத் தெரியவில்லை. அதிகாரம் காட்டி பழக்கமில்லை என்பதையும், மக்களின் பயமற்ற உணர்வையும் நீங்கள் புரிந்து கொண்டு, எங்கள் தேசத்தைச் சரிசெய்ய மீண்டும் வரவேண்டும்” என்ற தொனியில் நேரு அழைக்கிறார். மவுண்ட் பேட்டனும் வந்து நிலைமையைச் சரி செய்கிறார். ஓகே மவுண்ட் பேட்டன் ஹீரோ தான் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியதிருக்கிறது..

மவுண்ட் பேட்டனுக்கு அடுத்து இந்நூல் காந்தியைத் தான் கொண்டாடியிருக்கிறது. கொண்டாடக்கூடிய எல்லா தகுதிகளையும் மகாத்மாவின் செயல்கள் பெற்றிருக்கின்றன. ஜின்னாவின் வஞ்சம் எவ்வளவு தூரம் மோசமாக இருந்தாலும், இந்தியா பாகிஸ்தானுக்கு ஒப்பந்தப்படி கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்தே ஆகவேண்டும் என்ற முடிவை காந்தி எடுக்கிறார். நாம் கொடுக்கும் காசில் அவர்கள் ஆயுதம் வாங்கி அதை வைத்து நம்மைத் தான் தாக்க இருக்கிறார்கள் என்ற கருத்தை நேருவும் வல்லபாய் படேலும் முன்வைத்தும் கூட காந்தி தன் கொள்கையை பின் வைக்கவில்லை. இந்துவும் இஸ்லாமும் எனக்கு ஒன்றே என்ற கருத்தாக்கம் காந்தியிடம் இருந்தளவிற்கு வேறு யாரிடமும் இருக்கவில்லை. அதனாலே காந்தியின் முடிவை யாரும் பெரிதாக மெச்சவில்லை. இருந்தும் காந்தி பாகிஸ்தானுக்கு நாம் செய்ய வேண்டிய உரிமைக்காக போராடுகிறார். ஒன்றாக இருந்து வெவ்வேறாக வாழ்வதை விட, வெவ்வேறாக இருந்தாலும் ஒன்றாக வாழ்வோம் என்பதற்காக மகாத்மா எடுக்கும் ஆன்ம முயற்சிகள் எல்லாம் நெக்குருக வைக்கின்றன.

மகாத்மா மிகச்சிறந்த ஆத்மா என்றாலும் எதார்த்தத்தை மிஞ்சிய
அவரது ஆன்மிக மனநிலை எல்லாருக்கும் பொருந்துவன அல்ல என்ற கருத்தாக்கம் பலரிடமும் இருந்திருக்கிறது. குறிப்பாக நேரு மகாத்மாவிடம் முரண்படும் இடமாகவும் இது இருந்திருக்கிறது. நேரு அறிவியலை முன் வைத்து நின்றால் காந்தி ஆன்மிகத்தை முன் வைத்து நிற்கிறார். இரண்டையும் சமன்படுத்தும் லாவகம் யாருக்கும் வாய்க்கவில்லை

மனித வாழ்க்கையை பேரன்பு பெருங்கருணை என்ற உணர்வு ரீதியில் கடத்தச் செல்லும் காந்தியின் வாதமும் பெரிதாக ஜெயிக்கவில்லை..அதை காந்தியின் பேரன்களே செய்யவில்லை. நேருவின் பாதையை அவரது குடும்பமும் பெரிதாக நாடவில்லை.. சகிப்புத்தன்மை என்ற உச்சத்தை அடைந்த காந்தியின் நாட்டில் இன்று அது துளியும் மிச்சமில்லாமல் போயிற்று..ரைட்!

சாவார்க்கார் துணையோடு காந்தியை கொல்ல கோட்சே எடுக்கும் முடிவின் பின்னணியில் இருக்கும் மதவெறியும், சகிப்புத்தன்மை அற்ற செயலும் இன்றைய நாட்களிலும் பிரதிபலிக்கிறது. அது வாசிக்கையிலும் வலிக்கிறது.

சீக்கியர்கள் மற்றும் முஸ்லிம்கள் இரு தரப்பினரின் உயிர் வெறியும் சமரசமின்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மனதை மதம் நிறைத்தாலும் மதம் சொல்லும் அன்பை உணர்ந்து மனிதம் நிறைத்து வாழ்தலே வாழ்வின் பலன் என்ற காந்தியப்பார்வையே நாட்டின் தற்போதைய தேவை என்பதை நூலை வாசித்து முடித்ததும் தோன்றியது.