ஒரு கலைப்படைப்பு சமூக அக்கறையை தாங்கி நின்றால் அதை கொண்டாடக் கடமைப் பட்டுள்ளோம் நாம்.
சமுத்திரக்கனி என்றால் அட்வைஸ் பண்ணுவார் என்ற வாதம் ஒருபுறம் இருந்தாலும் அந்த அட்வைஸ்களின் தேவை அப்படியே இருப்பது தான் கொடிது. நாடோடிகள் படத்தில் பக்கா கமர்சியல் முத்திரையோடு காதல் என்பது கண நேரம் இன்பம் மட்டுமல்ல என்ற மெசேஜை சொன்ன சமுத்திரக்கனி இந்தப்படத்தில் சாதிப்பெருமை கருதி காதலை சீர்குலைக்கும் கூட்டத்தைச் சாடுகிறார்.
திருமணம் ஆகாத சசிகுமாருக்கு மனைவியாகும் அதுல்யா ரவி, தான் ஒருவனை காதலிப்பதாகவும், இந்தக் கல்யாணம் என் கட்டாயக் கல்யாணம் என்றும் அதிர வைக்கிறார். இப்படியொரு ட்விஸ்ட் வைத்து திரைக்கதையை பரபரவென கொண்டு செல்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. ஒரு காட்சியில் வந்து தனி முத்திரைப் பதித்தும் செல்கிறார். சசிகுமார் அஞ்சலி அதுல்யா ரவி என நடிப்பில் யாரும் குறை வைக்கவே இல்லை.
படத்தின் அட்டகாச பலமாக பின்னணி இசை இருக்கிறது. ஒளிப்பதிவும் தரமான சம்பவம். முன்பாதியில் நாடோடிகள் படத்தில் இருந்த வேகம் இல்லாவிட்டாலும் பின்பாதியில் வேகத்தோடு கூடிய விவேகமும் இருப்பதால் நாடோடிகளை மீண்டும் வரவேற்போம்
-மு.ஜெகன்சேட்