Tamil Movie Ads News and Videos Portal

நாய்சேகர் ரிட்டன்- விமர்சனம்

கைப்புள்ள, வக்கீல் வண்டுமுருகன், நாய்சேகர், என வடிவேலு செய்த காமெடி கேரக்டர்களை இருபது வருடங்கள் வரை கூட நினைவில் வைத்து மகிழ முடியும். நகைச்சுவை நடிப்பில் அப்படியொரு சகாப்தத்தைச் செய்தவர் வடிவேலு. இடையில் சில வருடங்கள் கழித்து தற்போது திரும்பவும் நாய்சேகர் ரிட்டன் என திரும்பி வந்திருக்கிறார்.

நம்பிக்கை கொஞ்சமும் உழைப்பு ஓவராகவும் இருப்பதற்கும், ஓவர் நம்பிக்கை மட்டும் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நாய்சேகர் பட டீம் இரண்டாம் விசயத்தை பலமாக நம்பியிருக்கிறது.

நாய்களை திருடி பணம் சம்பாதிக்கும் வடிவேலுவிடம், “முற்காலத்தில் ஒரு நாயின் வரவால் தான் நம் குடும்பம் சுபிட்ஷம் பெற்றது. அந்த நாயை நம் வீட்டில் வேலை செய்த ஒருவன் லவட்டிக் கொண்டுபோயுள்ளான். அவனை வீழ்த்தி நம் நாயை மீட்டு வா” என வடிவேலுவின் பாட்டிச் சொல்ல, வடிவேலு தன் டீமோடு தன் குடும்ப நாயை மீட்கச் செல்கிறார். எப்படியெல்லாம் காமெடி!!? செய்து மீட்டார் என்பதே நாய்சேகர் கதை

வடிவேலுவின் வருகைக்கு மகிழ்வும் வாழ்த்தும். ஆனால் இந்தக் கம்பேக்கை முழுமையாக கொண்டாட முடியாமல் போவது தான் சோகம். அவரது பாடிலாங்வேஜ், வசனமொழி ஆகியவற்றில் இழையோடும் இயல்புத்தன்மை இப்படத்தில் அடியோடு இல்லாமல் போய்விட்டது. வடிவேலு தோன்றும் முதல்காட்சியில் இருந்தே அவரின் நடிப்பில் எதார்த்தம் மிஸ்! ரெடின் கிங்ஸ்ட்லி, ஆனந்தராஜ் என எல்லா நடிகர்களும் பெரு முயற்சி செய்துள்ளார்கள் காமெடி செய்வதற்கு. அனைத்தும் முயற்சியாகவே போய்விட்டது

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை பெரும் இரைச்சல். வடிவேலு வாய்ஸில் வரும் அந்த ஒரு பாடல் மட்டும் தான் ஆறுதல். ஒளிப்பதிவாளர் தன் கடமையை கடமைக்கெனச் செய்துள்ளார். எடிட்டர் இன்னும் கூட தன் கத்திரிக்கு வேலை கொடுத்திருக்கலாம்

முழுக்க முழுக்க காமெடி கதையிலும் கூட சரியான ஸ்டோரி நரேட்டிங்கும், துண்டு துண்டாக தெரியாத காமெடி காட்சிகளையும் அமைப்பது தான் இயக்குநர் சுராஜின் பலம். நாய்சேகர் ரிட்டனில், அந்த மாதிரியான ரைட்டிங் இயக்குநருக்கு அமையவில்லை.
மெயின் லீட்-ஆன வடிவேலுவின் இலக்கை சரியாக நிர்யணம் செய்ய இயக்குநர் எடுத்துக் கொண்ட நேரம் படத்தில் பிரதான பிரச்சனையாக இருக்கிறது. வெறும் காட்சிகளை வைத்தே திரைக்கதையை அமைக்க முடியாது. இது வடிவேலுவின் ரீ.என்ட்ரிக்கான படம் என்பதால், சிலபலகுறைகள் இருந்தாலும் நோ என்ட்ரி போடாமல், எத்தனையோ வருடங்கள் நம்மை விலாநோக சிரிக்க வைத்த வடிவேலுவை வெல்கம் செய்வோம்.. அடுத்த படத்தில் நிச்சயமாக அவர் நம்மை ஏமாற்ற மாட்டார் என நம்புவோம்

2.75/5

-மு.ஜெகன் கவிராஜ்