‘இந்த நாடு எப்படியான படங்களை நாட வேண்டும்” என படத்திற்குள் பாடமெடுத்திருக்கிறது இந்த நாடு திரைப்படம்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஒரு மலைக்கிராமம். அங்குள்ள அரசு சுகாதர மருத்துவமனையில் எந்த மருத்துவரும் இருப்பதில்லை. காரணம் கிராமத்தின் வசதியின்மை. மருத்துவர் இல்லாத கிராமம் பெரும் அவதிகளைச் சந்திக்கிறது. இச்சூழலில் தன் கிராமத்திற்கு நிரந்தர மருத்துவர் வேண்டும் என அம்மக்கள் நாயகன் தர்சன் தலைமையில் ஒரு வித்தியாசமான போராட்டத்தை நடத்துகிறார்கள். பின் நாயகி மகிமா நம்பியார் அங்கு மருத்துவராக வந்து சேர்கிறார். மகிமாவை நிரந்தரமாக அக்கிராமத்தில் தக்கவைக்க அம்மக்கள் என்னமாதிரியான விசயங்களைச் செய்தார்கள் என்பது படத்தின் மீதிக்கதையாக விரிகிறது
தர்சனுக்குள் இப்படியொரு நல்ல நடிகனை கண்டெடுத்து வெளிப்படுத்திய விதத்திலே இயக்குநர் காஸ்டிங் ஏரியாவில் ஜெயித்துவிட்டார் எனலாம். தர்சனே இப்படியொரு நடிப்பை வழங்கிய பின் வேறு யாரைக் குறிப்பிட்டுச் சொல்வது? மகிமா நம்பியார் முதற்கொண்டு திரையின் தோன்றும் அனைவருமே முதிர்ச்சியான நடிப்பை வழங்கியுள்ளனர்
சத்யாவின் பின்னணி இசை படத்தை நம் இதயத்தின் முன் நிறுத்துகிறது. சக்திவேலின் ஒளிப்பதிவு மலைக் கிரமாத்திற்குள் நம்மை கண்பிடித்து அழைத்துச் செல்கிறது
படத்தின் நேர்மையான கதாநாயகன் கதையின் நாயகனான இயக்குநர் சரவணன் தான். தரமான மருத்துவம் மனிதர்களுக்கு எத்தகைய அவசியம் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார். ஒரு நொடி தாமதித்தால் உயிர்போகும் என்ற நோய்மை கொண்டவர்களுக்கு மருத்துவம் என்பது கடவுளுக்கும் மேலானது. குறிப்பாக மலைக்கிராம மக்களுக்கு சரியான மருத்துவம் தரப்படவேண்டும் என்பதை இயக்குநர் அழகான திரைமொழியோடு பேசியுள்ளார். ஆழமான கதை, அழகான திரைக்கதை என நாடு படம் நம் மனதை திரும்பத் திரும்ப நாட வைக்கிறது
3.75/5
-மு.ஜெகன் கவிராஜ்