Tamil Movie Ads News and Videos Portal

மை டியர் பூதம்- விமர்சனம்

குழந்தைகளுக்கான படம் என்ற அடையாளத்தோடு வெளிவந்துள்ள மைடியர் பூதம் குழந்தைகளை ஈர்த்ததா?

பூதங்களின் அரசனான பிரபுதேவாவிற்கு மகனைப் பிரிந்து சிலையாகும் படி ஒரு சாபத்தை கொடுக்கிறார் ஒரு முனிவர். பூலோகத்தில் சிலையாக கிடக்கும் பிரபுதேவாவை திக்குவாய் பிரச்சனையுள்ள மாணவன் அஸ்வந்த் தொட..பிரபுதேவா பூதமாக வெளிப்படுகிறார். அதன்பின் நடக்கும் சுவாரஸியங்களே படத்தின் திரைக்கதையாக விரிகிறது

மிகச்சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களை தன்னகத்தே கொண்டு இக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் ராகவன். இந்தக் கதைக்கும் காட்சிகளுக்கும் தன்னுடலை பூத உடலாக மாற்றி அற்புதமான உடல்மொழியோடு அசத்தியிருக்கிறார் பிரபுதேவா. அவரோடு படம் நெடுக பயணிக்கும் கேரக்டரில் அஸ்வந்த் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ரம்யா நம்பீசன் ஒரு ரெடிமேட் நடிப்பை மட்டுமே வழங்கி ஒதுங்கிக் கொள்கிறார்

சிற்சில க்ளிஷே காட்சிகளை கூட தன் அழகான பின்னணி இசையால் மெருகேற்றி இருக்கிறார் டி.இமான். பாடல்களிலும் பாசிட்டிவ் வைப்ரேசன் கிடைக்கிறது.
ஒளிப்பதிவாளர் மட்டும் தன் வேலையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்
மாஸ்டர் பாடலில் பூதமாக இருக்கும் பிரபுதேவா மாஸ்டராக மாறி மாஸ் காட்டியுள்ளது படத்தின் மற்றொரு எனர்ஜி

சிறு சிறு திருப்பங்கள் இருந்தாலும் ஓரளவு யூகிக்கக் கூடிய அளவிற்கே திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் ஓரிரு காட்சிகளில் எமோஷ்னலை திரையெங்கும் பரவ விட்டு நம்மை படத்திற்குள் இழுத்துக் கொள்கிறார். பிரபுதேவா உழைப்பு முயற்சி பற்றிப் பேசும் இடம் மிகச்சிறப்பான ஒன்று..கதையில் இருக்கும் பிரம்மாண்டம் காட்சிகளிலும் விரிந்திருந்தால் படம் வேறலெவலில் அமைந்திருக்கும். இப்போதும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தார் எல்லோரும் சேர்ந்து பார்க்கும் லெவலில் மை டியர் பூதம் இருக்குறது/ ஈர்க்கிறது.
3.5/5

-மு.ஜெகன் கவிராஜ்