Tamil Movie Ads News and Videos Portal

”என் காதல் உங்கள் பொழுது போக்கல்ல” – விஜய் தேவரகொண்டா

திரையுலக பிரபலமாக இருப்பதில் சாதகங்கள் பல இருப்பதைப் போல் பாதகங்களும் பல இருக்கின்றன. அதில் முக்கியமானது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விவாதப் பொருளாக மாறிவிடும் என்பது தான். இதற்கு நடிகர்கள் நடிகைகள் என யாரும் தப்புவதில்லை. சமீபத்தில் கூட நடிகை அனுஷ்கா தன் திருமணம் தொடர்பாக இன்னும் எத்தனை வதந்திகளைப் பரப்பவிருக்கிறார்கள் என்று அதிருப்தி தெரிவித்து இருந்தார். அந்த வரிசையில் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதல் தொடர்பாக துடுக்குத்தனத்துடன் செய்தி வெளியிடும் நபர்களுக்கு கோபமான பதிலைக் கொடுத்திருக்கிறார்.

தொடர்ச்சியாக இரு படங்களில் ராஷ்மிகா மந்தனாவுடன் நடித்ததைத் தொடர்ந்து அவருடன் காதலில் இருப்பதாக செய்தி பரவியதை வன்மையாக கண்டித்துப் பேசி இருக்கும் விஜய் தேவரகொண்டா, “என் காதல் பற்றி என் வீட்டார், நண்பர்களை விட வெளியில் இருப்போர் தான் அதிகமாக பேசுகின்றனர். காதல் என்பது அனைவருக்கும் ரகசியமான ஒன்று. அது அப்படித்தான் இருக்க வேண்டும். என் காதலைப் பற்றி நான் வெளியே கூற வேண்டும் என்று அவசியம் இல்லை. என் காதலை உங்களின் பொழுதுபோக்காகவோ அல்லது விவாதப் பொருளாக மாற்றுவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை” என்று கூறியிருக்கிறார்.