காய்க்கிற மரம் தான் கல்லடிபடும் என்று சொல்வார்கள். அதற்கு ஏற்றார் போல் கடந்த சில மாதங்களாக சமந்தா தொடர்பான சர்ச்சைகள் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. ஜானு படத்தின் தோல்விக்குப் பின்னர் தெலுங்கு ரசிகர்கள் அவரை ‘ஃப்ளாஃப் ஹீரோயின்’ என்று அழைத்தது. நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளும் உடைகள் கவர்ச்சியாக இருப்பதாக சொல்லி குற்றம் சாட்டுவது என, கோலிவுட் மற்றும் டோலிவுட் உலகிற்கு எப்பொழுதும் செய்தியாக மாறிக் கோண்டிருக்கிறார் சமந்தா. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது, “என் போன்ற ஹீரோயின்களுக்குக் கூட ஆடை குறித்த அச்சம் அதிகமாக இருக்கிறது.
அதிலும் திருமணம் முடிந்த பின்னர் எனது ஆடைகுறித்து என்னை அதிகமாக விமர்சித்தார்கள். அது என்னை கடுமையாக பாதித்தது. அந்த நிகழ்ச்சி, நான் திருமணம் செய்து கொண்ட புதிதில் நடந்தது. ஆனாலும் நான் அடுத்த நிகழ்ச்சிக்கும் அதே போன்ற உடையில் தான் சென்றேன். அப்பொழுது விமர்சனங்கள் சற்று குறைந்திருந்தன. அப்பொழுது தான் நான் உணர்ந்தேன் ஆடை குறித்த விசயத்தில் மக்களை பழக்கப்படுத்த வேண்டியிருக்கிறது என்று. மாடர்ன் உடைகள் அணிவது என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை. அதில் ஏன் பிறர் மூக்கை நுழைக்கிறார்கள் என்று தெரியவில்லை. அது குறித்தெல்லாம் கவலைப்படவோ பயப்படவோ வேண்டாம் என்பது தான் நான் என் அனுபத்தில் தெரிந்து கொண்டது. மேலும் திருமணம் ஆனப் பின்னர் இப்படித்தான் ஆடை அணிய வேண்டுமென்கின்ற கோட்பாடுகளை தூக்கி எறிய வேண்டும்” என்று பேசியுள்ளார்.