சில கவிதைகள் காட்சிகளாக விரிந்து நமக்கு படம் காட்டும்..சில கவிதைகள் பாடம் புகட்டும்…யுகபாரதி அண்ணனின் கவிதைகள் பாடத்தைச் சொல்வதோடு பட்டதையும் படுவதையும் பட்டென சொல்லக்கூடியவை
இந்தநூலில் வெயில்பாடம் என்ற தலைப்பில் சில வரிகள் வியர்வை போல மதிப்புமிக்கவை
/தேகத் திருவோட்டில் வேர்வைக் காசுகளை சேமிப்பவன்
இந்தியப் பொருளாதரத்தில் ஏழை
தேசத்தையே திருவோடாக மாற்றுபவன் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.
நீங்கள் அழுவதைப் போல நடிக்கலாம்..
ஒருபோதும் வேர்ப்பதை போல வேடமிட முடியாது/
174 தலைப்புகளில் வெயில் பாடம் என்ற தலைப்பில் வரும் இக்கவிதை சம்மட்டியடியாக இருந்தது..
சொற்களுக்குள் எந்தச் சமரசமும் இன்றி ஓலை வெடி போல ஓசை தாங்கி வருபவை தான் யுகபாரதி அண்ணனின் வரிகள். இந்த நூலில் அவரது இயல்பில் இருந்து மாறி கவிதைகள் அழகூட்டுகின்றன.
கடந்தகால இழப்புகளை எண்ணி கலங்க வைக்கும் வரிகளில் கூட நமது இழப்பிற்கான அரசியல் காரணங்களை அண்ணன் அடுக்கத் தவறுவதில்லை
பிடித்த தலைவராக இருந்தாலும் படித்த தலைவராக இருந்தாலும் அவர் அப்பாவிகளின் சாவுக்கு துணைபோனால் சொற் சவுக்கு கன்பார்ம்… எத்தனை பேர்களின் வாழ்த்தில் குளிக்கிறோம் என்பது முக்கியமல்ல… பத்து அப்பாவிகளின் சாபத்தில் விழுந்து விடக்கூடாது என்பதை அறம்பட உணர்த்துகின்றன சில கவிதைகள்..
சமயத்தில் நிலவு என்பேன் சமையலில் உதவி செய்வேன் என்று மனைவிக்கு பாடும் கணவனில் தெரியும் கவிஞனும் ஈர்க்கிறான்…
பாடலாசிரியராக வேண்டுமானால் நாம் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற சுய எள்ளல் கவிதையில் வரும் பாடலாசிரிய கவிஞனும் ஈர்க்கிறான்..
உலகமயமாக்கலுக்குப் பின்னான வாழ்வியல் மாற்றங்களில் முனியாண்டி விலாஸ்களையும் முனியாண்டிகளையும் முற்றாக மறப்பது என்பது நமக்குத் தான் பெரும் இழப்பு…