Tamil Movie Ads News and Videos Portal

பிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’ முன்னோட்டம் வெளியீடு!

டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படம் தயாராகியிருக்கிறது. பிரைம் வீடியோவில் மே 18 ஆம் தேதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் ஒப்பற்ற ஆளுமைகளான பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இணைந்து இதனை இயக்கியிருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்த மாடர்ன் லவ் எனும் அசல் இணையத் தொடரின் தமிழாக்க திரைப்படத்தில் சஞ்சுலா சாரதி, சூ கோய் ஷெங், ஸ்ரீகிருஷ்ண தயாள், அசோக் செல்வன், டி ஜே பானு, ஸ்ரீ கௌரி பிரியா, வாசுதேவன் முரளி, வசுந்தரா, ரிது வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், அனிருத் கனகராஜன், கிஷோர் ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி, வாமிகா மற்றும் பிபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அமேசான் ஒரிஜினல் தொடர் மாடர்ன் லவ் சென்னை மே 18, 2023 அன்று 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது இந்நிலையில் சென்னையில் இதன் முனனோட்ட வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது- இதில் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் அமேசான் பிரைம் இந்திய பிரிவின் தலைவரான சுஸாந்த் ஸ்ரீராம் உள்ளிட்ட அமேசான் பிரைம் வீடியோவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதன் போது படைப்பு உருவாக்க ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான தியாகராஜன் குமாரராஜா மாடர்ன் லவ் சென்னை படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

படைப்பு உருவாக்க ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான தியாகராஜன் குமாரராஜா பேசுகையில்,

ப்ரைம் வீடியோவின் மாடர்ன் லவ் சென்னை எனும் ஆந்தாலஜி பாணியிலான திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் படைப்பாளிகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் வணக்கம். இந்த ஆந்தாலஜி பாணியிலான படைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்ட அனுபவம் உள்ளார்ந்த அனுபவமாக இருந்தது. தொடக்கத்தில் எட்டு மாத கால அவகாசத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என திட்டமிட்டோம். ஆனால் இரண்டரை ஆண்டுகளாகிவிட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் மறக்க இயலாத அனுபவமாக மாறியது. இருப்பினும் இந்த படைப்பு சர்வதேச தரத்தில் உருவாகி இருக்கிறது.

நியூயார்க் டைம்ஸ் எனும் நாளிதழில் ‘மாடர்ன் லவ்’ எனும் தலைப்பில், அதன் வாசகர்கள் தங்களது அனுபவத்தை கட்டுரை வடிவில் பகிர்ந்து கொண்டனர். அந்தக் கட்டுரை ஆயிர கணக்கை கடந்த பிறகு, இதனை ஒரு நிகழ்ச்சியாக ஏன் உருவாக்கக் கூடாது என ஒருவர் சிந்தித்தார். அதன் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக முதல் சீசன் வெளியானது. இதில் எட்டு கதைகளை தேர்ந்தெடுத்து ஆங்கில மொழியில் ஒளிபரப்பானது. இதன் வெற்றிக்குப் பிறகு, இரண்டாவது சீசனை ஆங்கில மொழியை கடந்து, சர்வதேச அளவில் உருவாக்க வேண்டும் என்றும், அதனை இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று இந்திய மொழிகளில் உருவாக்க வேண்டும் என்றும் திட்டமிடுகிறார்கள். இந்தியிலும், தெலுங்கிலும், ‘மாடர்ன் லவ் மும்பை’, ‘மாடர்ன் லவ் ஹைதராபாத்’ எனும் பெயரில் வெளியாகி வெற்றியைப் பெற்றிருக்கிறது. தற்போது தமிழில், ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் பெயரில் தயாராகி இருக்கிறது.

தமிழில் இடம் பெற்றிருக்கும் ஆறு கதைகளும் ஏற்கனவே வெளியான கதைகள் அல்ல. நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான எட்டு கட்டுரைகளை தேர்ந்தெடுத்து, அதனை திரைக்கதையாக்கி படைப்பாக வழங்கினர். அதேபோல் ஜப்பனீஸ், டச்சு, ஸ்பானிஷ் என ஒவ்வொரு மொழிகளிலும் வித்தியாசமான கட்டுரைகளை படைப்பாக்கி வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து தமிழிலும் அந்த நாளிதழில் வெளியான மாடர்ன் லவ் குறித்த கட்டுரைகளை எங்கள் குழு பரிசிலித்து, அதில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து, விவாதித்து, தமிழ் சூழலுக்கும் சென்னை மண்ணின் மக்களுக்கான கதையாகவும் மாற்றி உருவாக்கியிருக்கிறோம். சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறுவது போல் இந்த ஆறு கதைகளையும் எழுதி இருக்கிறோம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகையான வாழ்க்கை முறை என பிரித்து இந்த படைப்பை உருவாக்கி இருக்கிறோம்.காதலில் பரிசோதனை முயற்சிகளில் எதிலும் ஈடுபடாமல், வழக்கமான கதை களத்திலேயே கதாபாத்திரங்களின் மூலம், எல்லைகளை விரிவுபடுத்தி, சுவாரசியமாக புதுமையான கோணங்களில் சொல்ல இயலுமோ.. அதனை காட்சிப்படுத்தி இருக்கிறோம். ‘

யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து இரண்டு படங்களில் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் அவருடைய பாடல்களை பயன்படுத்த முடியவில்லை. இந்த திரைப்படத்தில் டைட்டில் பாடலில் யுவனுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இயக்குநர் பாலாஜி சக்திவேல், யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றியதில்லை. அதனால் அவரிடம் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பமா? என கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டார். இயக்குநர் ராஜுமுருகனுக்கும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கும் இடையே ஒரு பிணைப்பு இருக்கிறது. அதனால் அவர் இயக்கிய அத்தியாயத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அத்தியாயத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.” என்றார்.

#ModernLove