அட்டகாசமான மேக்கிங்-ஐ வைத்து கொஞ்சம் குறைகள் அடங்கிய திரைக்கதையை கூட வெற்றிப்படமாக்கி விட முடியும் என நம்பியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி. அவரது நம்பிக்கைக்கு ரசிகர்கள் பதில் சொல்வார்கள். நாம் விமர்சனத்திற்குள் வரலாம்
சந்திப் கிஷன் கெளதம் மேனென் இருவருக்குமான ஒட்டிக்கோ வெட்டிக்கோ மோதல் தான் படத்தின் ஒட்டுமொத்த கதையும். இடையில் அதிமான தாய்ப்பாசம், மேலான மாஸ் ஆக்ஷன் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டால் மைக்கேல் ரெடி
முழுக்க முழுக்க ஆக்ஷன் சந்திரமுகியாக மாறி நிற்கிறார் சந்திப் கிஷன். ஒரு நல்ல ஆக்ஷன் அடையாளம் வேண்டி அவர் உழைத்திருந்தாலும், “பத்தல தல” என்றே சொல்ல வேண்டியுள்ளது. கெளதம் மேனென் கொடுத்ததை கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக செய்திருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் வரும் விஜய்சேதுபதி படத்திற்கு ஓரளவு சிறப்பு சேர்த்திருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் போதுமான நடிப்பை வழங்கியுள்ளார்
சாம் சி எஸ் படத்தை தூக்கி நிறுத்த அயராது உழைத்திருக்கிறார். அப்படியே ஒளிப்பதிவாளரும் தன்னை இப்படத்தின் ஆன்மா எனச்சொல்லிக் கொள்ளலாம். அந்தளவுக்கு விஷுவலில் மிரட்டியிருக்கிறார்.
எல்லா பேன்ஸுக்கும் பிடித்த மாதிரி ஒரு பேன் இண்டியா படத்தை தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர். கே.சி எஃப் படத்தின் பாதிப்பும் ஆங்காங்கே தெரிகிறது. ஆனால் உற்சாகமான மேக்கிங் அளவிற்கு உயிரோட்டமான திரைக்கதை இல்லாததால் ஜெட்டில் போக வேண்டிய மைக்கேல் சைக்கிளில் செல்கிறார்..
இருப்பினும் சிலபல ஸ்டைலிஷ் மெனக்கெடலுக்காக தியேட்டருக்கு ஒரு விசிட் அடிக்கலாம்.
2.75/5
-மு.ஜெகன் கவிராஜ்