கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர்வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கும் விதையை சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் விதைத்துள்ளது. ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற பெயரில் அனிமேஷன் திரைப்படமாக கல்கியின் புகழ்பெற்ற நாவலை தயாரித்துள்ளது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது. ‘பெரியார் குத்து’ பாடல் மூலம் அனைவரின் கவனத்தைக் கவர்ந்த ரமேஷ் தமிழ்மணி இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாகுபலி எந்திரன் போன்ற வெற்றிப்படங்களில் வசனம் பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி இந்தப் படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். தவச்செல்வனின் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இந்த ஆண்டு பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.