பேரன்பின் பெருந் தரிசனம்
இரு ஆண்கள் படம் நெடுக பேசிக்கொண்டிருப்பதை படமாக்க முடியுமா? அது படமாக முடியுமா? என்ற கேள்வியோடு படம் பார்க்க அமர்ந்தால் படமெங்கும் ஆச்சர்யத்தை அளிக்கிறான் இந்த மெய்யழகன்
தஞ்சாவூரை பூர்விகமாக கொண்ட அரவிந்தசாமி தன் வேர் மறந்து குடும்பத்தோடு சென்னையில் வசிக்கிறார். ஊரோடு உறவுகளை அவர் அறுத்தெறிந்து வாழ்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இச்சூழலில் ஊரில் நடக்கும் சித்தி மகளின் திருமணத்திற்காக அவர் தஞ்சாவூர் செல்லும் சூழல் வருகிறது. வந்த இடத்தில் பழைய உறவுகளைச் சந்திக்கிறார். அதில் முக்கியமான உறவாக வருகிறார் கார்த்தி. அரவிந்தசாமியின் ஒருநாள் வாழ்வில் கார்த்தி வந்தபின் அரவிந்தசாமிக்கு அக ரீதியாக என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதே கதை
கார்த்திற்கு நடிப்பில், ‘கரியர் பெஸ்ட்’ என்று சொல்லக்கூடிய படங்கள் சில உண்டு. அதில் மெய்யழகனையும் சேர்க்கலாம். பிரமாதமாக நடித்துள்ளார். அரவிந்தசாமி காட்டும் நிதானம் மிகுந்த நடிப்பு படத்திற்கு அசுர பலம் சேர்த்துள்ளது. தேவதர்ஷினி, ராஜ்கிரண் உள்ளிட்ட ஏனைய நடிகர்கள் படத்தில் இருந்தாலும் திரையெங்கும் நிறைந்திருப்பது கார்த்தியும் அரவிந்தசாமியும் தான்
ஒளிப்பதிவாளர் தஞ்சை அழகை கண்கள் வழியாக நம் நெஞ்சில் இறக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா 96 சாயல் இல்லாமல் இசைக்க முயற்சித்துள்ளார் சிறப்பாக வந்துள்ளது இசை.
படம் நெடுக இருவரின் அன்பு வழிப்பயணம் தான் என்பதால், மனம் படத்தின் மீது இயல்பாகவே கட்டுண்டு கிடக்கிறது. பின்பாதியில் சின்னதாக கத்தரி வைத்திருக்கலாம் என்றாலும், பின்பாதியில் பேசியுள்ள சகிப்புத்தன்மை, போராட்ட உணர்வு, நம் வரலாறு, பண்பாடு, அஃன்றினை மீதான காதல் ஆகியவை சிறப்புக்குரியதாக இருக்கிறது
சட்டென முடியும் இந்த சின்ன வாழ்வில் வழியெங்கும் அன்பையும் மன்னிப்பையும் பேசச் சொல்கிறான் இந்த மெய்யழகன். மெய்யழகனுக்கு வாய்த்த மனம் மட்டும் எல்லோருக்கும் வாய்த்து விட்டால், ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ தான்
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்