படம் முடிந்து வெளியில் வரும்போது, ‘எப்படி மறக்குமா நெஞ்சம்?’ என்ற கேள்விக்கு, “வழி விடுறீயா கொஞ்சம்” என்று பதில் அளித்தார் ஒருவர்.. காரணம் படத்தில் இருக்கிறது
கூட்டமாக வாட்ஸப்பில் சேர்ந்து ஒரு ரீ யூனியனை முடிவு செய்தால் எதார்த்த சினிமாவாக இருக்கும் என்று யோசித்த இயக்குநர் ராகோ யோகன்றன் வித்தியாசமாக யோசித்தது என்னவென்றால்….
“12 வருடத்திற்கு முன்பு ஒரு பள்ளியில் நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. அதனால் அந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் அனைவரும், இப்போது அங்கிள்கள், ஆண்டிகள், சிங்கள்களாக இருந்தாலும் மறுபடி தேர்வு எழுத வேண்டும் என்று கோர்ட் சொல்கிறது. உடனே ஹீரோ தக்ஷன் உள்பட எல்லோரும் படித்த பள்ளிக்கு தேர்வு எழுத யூனிபார்மோடு வருகிறார்கள். அங்கு சொல்லப்படாத காதல், எழுதப்படாத கடிதம் உள்ளிட்டவற்றை வைத்தால் ரீ யூனியன் Feel வந்த மாதிரியும் ஆச்சு.. வித்தியாசமாக யோசித்த மாதிரியும் ஆச்சு என யோசித்துள்ளார் இயக்குநர்.. செல்லாது செல்லாது
ஹீரோ ரக்ஷன் தானொரு ஹீரோ என்பதை மறந்து எப்போதும் வி.ஜே மோட்லே இருக்கிறார். நண்பர்கள் கேங்கில் தீனா மற்றும் ராகுல் கவர்கிறார்கள்
பின்னணி இசையோ பாடல்களோ படத்தை முன்னணியில் நிறுத்தும் வேலையைச் செய்யவில்லை. ரசிகனை வருத்தும் வேலையைத் தான் செய்துள்ளது. ஒளிப்பதிவாளர் எம்டி ப்ரேம்களை மறைக்க மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.
வெளிப்படுத்தாத காதலும், அதை வெளிப்படுத்த ஏற்படுத்தப்படும் சூழலும் கவித்துவம் வாய்ந்தவை. அதைச் சரியான காட்சியமைப்புகளும் உணர்வுக்கோர்வையும் ஒருங்கே பெற்று திரைவழியே சொன்னால் தான் ஒரு Feel good movie கிடைக்கும்.. மறக்குமா நெஞ்சம் படக்குழு அதை மறந்துவிட்டது போல. அதனால் மறக்குமா நெஞ்சம் முடிந்த மறுகணமே மனதை விட்டு மறைந்து விடுகிறது
2/5
-மு.ஜெகன் கவிராஜ்