எளிமையே வலிமை என வருடந்தோறும் நிரூபித்து வரும் கடவுள் தேசத்தில் இருந்து ஓர் பிரம்மாண்ட சினிமா மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம். வரலாற்றைத் தழுவி எடுக்கப்படும் கதையில் வரலாற்றுப் பிழை கூட இருக்கலாம் தவறில்லை. ஆனால் திரைக்கதையில் பிழை இருந்துவிடலாகாது. மரைக்காயரில் அப்படியான பிழை இருக்கிறதா?
Sure ah சொல்லலாம் இப்படம் ஓர் அட்டகாச விஷுவல் எக்ஸ்பீரியன்ஸ்! ஒரு சைனா வீரனுக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் இருக்கும் காதல் காட்சிகளில் ஒரு பாடல் வருகிறது. நிச்சயமாக சமீபகால இந்திய சினிமாக்களில் வந்த பாடல்களில் இவ்வளவு அழகான ரொமாண்டிக் விஷுவல்ஸை பார்க்கவில்லை. அவ்வளவு அழகு அத்தனை நேர்த்தி. போலவே கம்ப்யூட்டர் கிராபிக்ஸும் ஆகத்தரமாக அமைந்திருக்கிறது. கப்பல் சண்டைக்காட்சிகளும் சரி, அர்ஜுன் அசோக்செல்வன் சைனா வீரன் ஆகியோருக்கான சண்டைக்காட்சியும் சரி கம்பீரம் கச்சிதம்!
சாமுத்திரி மன்னருக்கு வலைவிரித்து வெள்ளையர்கள் கேரளத்தை அபகரிக்க நினைக்கிறார்கள். சாமுத்திரிய அரசில் நெடுமுடிவேணு இருக்கும் வரை அது நடக்கவில்லை. அதனால் அவரை சூழ்ச்சி செய்து உள்ளிருப்பவர்களே அகற்றுகிறார்கள். கடல்கொள்ளையரான மோகன்லாலும் மன்னரிடம் இருந்து பிரிந்து நிற்கும் சூழல் வருகிறது. குழப்பங்கள் எப்படி தீர்கிறது? என்பதே படத்தின் கதை
மோகன்லாலின் நடிப்பைப் பற்றி இன்னும் எழுதிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை. ஏன் என்றால் அவர் நடிப்பால் அடைந்த உச்சம் அப்படி. அர்ஜுன், பிரபு, மஞ்சுவாரியார், நெடுமுடிவேணு, அசோக்செல்வன், சைனா வீரன், கீர்த்தி சுரேஷ் என திரையெங்கும் பெரிய நடிகர்கள். மனதில் நிற்கும் பாத்திரங்கள் கீர்த்தி சுரேஷ், அசோக்செல்வன், அர்ஜுன், சைனா வீரன். குறிப்பாக கீர்த்தியைச் சுற்றி நடக்கும் ஒரு ப்ளே படத்தின் பெரிய ப்ளஸ்
இவ்வளவு சீரியசான கதையை துவக்கத்தில் ஏன் இப்படி துவள விட்டார் பிரியதர்சன் என்பதே முதல்கேள்வி. பிரம்மாண்டத்தில் இருக்கும் துல்லியத்தை திரைக்கதையில் செலுத்தி இருந்தால் இந்த மரைக்காயர் மனதை முழுவதுமாக அல்லவா கொள்ளை அடித்திருப்பார்.
-மு.ஜெகன் கவிராஜ்