திரைக்கதையை நம்பி வந்துள்ளார் மகாராஜா
எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வரும் சலூன் தொழிலாளி விஜய்சேதுபதி. மகள் என்றால் அவருக்கு உயிர். மகளின் உயிரைக் காப்பாற்றிய ஒரு பொருள் திருடு போகிறது. அதைக் கண்டுபுடித்து தரும்படி விஜய் சேதுபதி போலீஸ்டேசன் செல்கிறார். அவர்கள் விஜய்சேதுபதியை பணத்திற்காக பயன்படுத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் விஜய்சேதுபதி தான் போலீஸை பயன்படுத்துகிறார் என்பதும், அதன் பின்னணி தெரிய வருவதும் படத்தின் அதிரிபுதிரி ட்விஸ்ட். அதன் பின் இந்த மஹாராஜாவின் இலக்கு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை
கதாநாயகனான விஜய்சேதுபதி கதையின் நாயகனாக மாறி தன் 50-ஆவது படத்தில் நடிப்பில் தானொரு மகாராஜா தான் என்பதை நிரூபித்துள்ளார். எமோஷ்னல் காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் பரிமாணம் நேச உணர்ச்சியின் உச்சம். மம்தா மோகன் தாஸுக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை. அபிராமி கொடுத்த கேரக்டரை அழகாக உள்வாங்கி அசத்தியுள்ளார். அனுராக் காஷ்யப் தனது மீட்டரைத் தாண்டாமல் நடித்து ஸ்கோர் செய்கிறார். நட்டி இயல்பாக நடித்துள்ளார். அருள்தாஸ், முனிஷ்காந்த் ஆகியோர் வழக்கமான அட்டனென்ஸை போட, சிங்கம் புலி சிங்கப்பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார்.பாய்ஸ் மணிகண்டனும், குணால் ரசிகனாக வரும் கவுன்சிலரும் கவனிக்க வைக்கிறார்கள். விஜய்சேதுபதியின் மகள் கேரக்டரில் நடித்தவர் மனதை உருக்குகிறார்
சின்னச் சின்ன கேரக்டர்கள் கூட வெகு இயல்பாக படத்தில் ஒன்றிப்போய் நடித்துள்ளனர். உதாரணத்திற்கு பாத்திரக் கடையில் வேலை செய்பவராக வரும் புரொடக்சன் மேனஜர் காமராஜ் பாடிலாங்குவேஜைச் சொல்லலாம்
டெக்னிஷியன்ஸை எப்படி வளைத்து வளைத்து வேலை வாங்க வேண்டும் என்ற வித்தையை இயக்குநர் நித்திலனிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கதையின் ஆன்மாவையும், திரைக்கதையின் நுட்பமான பயணத்தையும் அழகாக விளக்கியுள்ளார். அதனால் தான் இசை அமைப்பாளர், எடிட்டர், ஒளிப்பதிவாளர் என அனைவரும் சிறப்பாக பங்களித்துள்ளனர். அனைத்து டெக்னிஷியன்ஸுக்கும் இந்த மகாராஜா பொற்கிழி கொடுக்கவேண்டும். ரசிர்கர்கள் மூலமாக நிச்சயம் கொடுப்பார்
ஒரு சின்னப்புள்ளியில் துவங்கும் கதை அப்படியே பெரும் புள்ளியாக மாறும் தருணத்தை திரைமொழி மூலமாக சிறப்பாக நிகழ்த்தியுள்ளார் நித்திலன். நல்ல திரை எழுத்தும், ஆக்கப்பூர்வமான உணர்வையும் கடத்திய வகையில் இந்த
மஹாராஜா கம்பீரமான சிம்மாசனத்தை பெறுகிறார்
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்