Tamil Movie Ads News and Videos Portal

மகான்- விமர்சனம்

காந்தியம் பேணும் குடும்பத்தில் இருந்து வந்த விக்ரம் பாபிசிம்ஹாவோடு சேர்ந்து சாராயம் காய்ச்சும் தொழிக்குச் செல்கிறார். அதனால் குடும்பம் பிரிகிறது அவரின் குடி வளர்க்கும் நட்பு விரிகிறது. காந்தியக் கொள்கைகளை துயரத்தில் விட்டுவிட்டு குடித்தொழிலில் உயரப்பறக்கிறார் விக்ரம். ஒரு கட்டத்தில் அவருக்கு வில்லனாக வந்து நிற்கிறார் துருவ். இருவருக்குமான மோதலும் எமோஷ்னலும் அரங்கேற முடிவில் வென்றது மகானா? மகனா? என்பதே படத்தின் லைன்

ஒற்றை ஆளாய் வரும்போதும் சரி பத்துப்பேரோடு வரும்போதும் சரி நடிப்பில் விக்ரம் தனித்துத் தெரிகிறார். நிறைய ஹீரோயிசத்தோடு துளியூண்டு வில்லனிசம் காட்டி மிரட்டியிருக்கிறார். அவருக்கு நேர் எதிர் கேரக்டரில் துளியூண்டு ஹீரோயிசமும் மொத்தமாக வில்லனிசமும் காட்டி அதகளம் செய்திருக்கிறார் துருவ். இவர்கள் இருவரையும் ஒருசில இடங்களில் ஓவர்டேக் செய்யும் விதமாக எமோஷ்னல் காட்சிகளில் அடித்து ஆடுகிறார் பாபிசிம்ஹா. பக்கா அக்ரஹார குடும்பத்தலைவியாக சிம்ரன் கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார். படத்தில் தெரியும் சிறு கேரக்டர்களும் ஜொலிக்கிறார்கள். அது கார்த்திக் சுப்புராஜ் செய்துள்ள மேஜிக்

சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை கார்த்திக் சுப்புராஜின் காட்சிமொழிக்கு ஏற்ற வேகம் விவேகம் கொடுக்க சில இடங்களில் தடுமாறி இருக்கிறது. என்றாலும் சில பிஜிஎம் ஏரியாக்கள் சிறப்பு. ஒளிப்பதிவாளர் அந்தந்த காலகட்டத்தை காலத்திற்கேற்ப கலரோடு வழங்கியிருக்கிறார். ஆர்ட் டைரக்டர் உழைப்பும் மெச்சத்தக்கதே

பின்பாதியில் சுழல் காற்றாய் பறக்கும் திரைக்கதை முன்பாதில் காந்தியின் பொறுமை போல பயணிக்கிறது. ஆனால் அதுதான் கதைக்களத்தை வலுவானதாக மாற்றுகிறது. எந்த ஒன்றையும் அதிதீவிரமாக கடைபிடிப்பதில் உள்ள மனச்சிக்கலை மிக லாவகமாக கையாண்டு படத்தை கமர்சியலாக முடித்ததில் கார்த்திக் சுப்புராஜ் பேட்ட-யில் மற்றுமொரு வெற்றிப்படம் இந்த மகான்

-மு.ஜெகன் கவிராஜ்