புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாயோன் மலையில் பள்ளிகொண்ட கிருஷ்ணர் கோவில் இருக்கிறது. அக் கோவிலுக்குள் விலை மதிப்பற்ற பொருட்கள் இருப்பதாக தொல்லியல் துறை கண்டு பிடிக்கிறது. தொல்லியல் துறை அதிகாரியான சிபிராஜ் ஒரு தனிடீல் செய்து அந்த நகைகளை அபகரிக்க நினைக்கிறார். அவரின் முயற்சியை ஆன்மிக அதிர்வுகளும், அறிவியல் அறிவும் எப்படி முறியடிக்கிறது? சிபிராஜின் தந்திரமூளை படத்தின் இறுதியில் என்ன முடிவெடுக்கிறது என்பதே மாயோன் கதை
படத்தின் துவக்கக் காட்சியிலே சிபிராஜின் கேரக்டரை மனதில் பதியவைத்த விதம் நன்றாக இருந்தது. அதேபோல் ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு தன்மை கொடுத்து திரைக்கதையை அழகாக அமைத்துச் சென்றிருக்கிறார் அருண்மொழி மாணிக்கம்
வசனங்களிலும் நிறைய டீடெய்லான விசயங்களைச் சேர்திருந்தார்கள். படத்தில் மற்றுமொரு பாராட்ட வேண்டிய அம்சம் குழந்தைகளை மட்டும் கவரும் விதமான CG காட்சிகள். அம்மாம் பெரிய பாம்பு வளைந்து நெளிந்து விரட்டும் காட்சிகள் குழந்தைகளை கவரும். தெளிந்த நீரோடை போல செல்லும் படம், மிகச்சில இடங்களில் மட்டும் சற்று தேங்கி நிற்பதை இயக்குநரும் எடிட்டரும் கொஞ்சம் டிஸ்கஸ் செய்து சரி செய்திருக்கலாம்..
படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத் நன்றாக உழைத்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையில் மாயோன் என்ற பாடல் அட்டகாசமாக இருக்கிறது. பள்ளிகொண்ட பெருமாளை காட்டியபடியே பயணிக்கும் அப்பாடல் ஆன்மிக விரும்பிகளுக்கு ஆன்மவிருந்து. பின்னணி இசையிலும் காட்சிகளுக்கு ஏற்ற ராஜாங்கம் இருந்தது
சிபிராஜ் ஒருசில இடங்களில் போல்டாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் அதிக சிரத்தை எடுத்து நடித்திருக்கலாம் என்றே தோன்றியது. நாயகி பகவதிபெருமாள் ஹரிஸ் பேரிடி என ஏனைய நடிகர்கள் கொடுத்த வேலையைச் சரியாக செய்துள்ளனர். ராதாரவி தனியாக ஸ்கோர் செய்கிறார்
அரசாங்கமும் நல்ல தொல்லியல் துறை அதிகாரிகளும் கஷ்டப்பட்டு கண்டுபுடிக்கும் பழமை வாய்ந்த பொக்கிசங்களை புல்லுருவிகள் களவாடி விற்பதை தோலுரித்துக் காட்டும் மாயோன், ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது
-மு.ஜெகன் கவிராஜ்