Tamil Movie Ads News and Videos Portal

மாயநதி- விமர்சனம்

நதி என்பது எல்லையற்றது. நதிபோல் ஓடிக்கொண்டே இருப்பது தான் நல் வாழ்வுக்கான ஆதாரம். தூயநதிகளை கடக்கும் நம் வாழ்வில் சில மாயநதிகளும் வரும். அதைக் கவனத்தோடு எதிர்கொண்டு கடக்க வேண்டும் என்கிறது மாயநதி திரைப்படம்.

தந்தையை தாயாகப் பெற்ற நாயகி வெண்பாவிற்கு படிக்கும் வயதில் ஒரு காதல் வந்து தொலைக்கிறது. இதயம் தொலையும் தருணத்தை யாரால் தான் யூகிக்க முடியும்? தன்னை உயிரில் ஏந்தி வளர்க்கும் தந்தையின் கனவுக்கு தன் காதலால் இடறு வரும் சூழல் உருவாக…அப்புறம் வெண்பா எப்படி வென்றாள் என்பதே மாயநதி.

இந்தப்படத்தை வேறு யாருக்காகவும் பார்க்க வேண்டாம். வெண்பா என்ற ஒரு அட்டகாச நடிகைக்காக மட்டுமே பார்க்கலாம். திரையில் அவர் இருக்கும் ஒவ்வொரு நொடிகளையும் தன் நடிப்பால் சுவாரசியமாக்குகிறார். வெறும் எதிர்பாலின ஈர்ப்பால் சக வயது மாணவன் தன்னிடம் காதலைச் சொல்லும் போது அதை எதிர்க்கும் லாவகம், அப்பாவிடம் உடைந்து போகும் உணர்ச்சி, என வெண்பா இப்படத்தில் எழுதி இருப்பது ஓர் உணர்வுக்கவிதை! வாழ்த்துகள்!

நாயகம் அபி சரவணன் எதார்த்த நடிப்பால் கவனிக்க வைக்கிறார். அவர் தோழனாக வரும் அப்புக்குட்டி படத்தின் எனர்ஜி. மற்றொரு தோழனாக வரும் கார்த்திக் ராஜா தனது பங்களிப்பை ஒரு தேர்ந்த நடிகர் போல செய்திருக்கிறார். படத்தின் இன்னொரு ஹீரோ நரேன் தான். கதை அவரிடம் இருந்து தான் துவங்குகிறது. அவரிடம் தான் முடியவும் செய்கிறது. அனுபவ நடிகன் என்பதை அவரின் க்ளோசப் ஷாட்கள் சொல்லிச் செல்கின்றன.

படத்தில் பவதாரிணி இசையால் நம்மை வசீகரிக்க ஒளிப்பதிவாளரும் ஒன்றும் குறை வைக்கவில்லை. இரண்டு மணி நேர படத்தை அலுப்பு தெரியாத படி சீரான திரைக்கதை அமைத்து கொண்டு போகிறார் அறிமுக இயக்குநர் அசோக் தியாகராஜன்.

அர்ஜுனனின் கவனம் எப்போதும் தான் வைக்கும் குறியில் மட்டும் தான் இருக்கும். அப்படி குறி தவறாமல் இலக்கை குறி வைப்பவர்கள் தான் வாழ்வில் வெல்ல முடியும். அதுவும் பெண்கள் மிகக் கவனமாக குறி வைக்க வேண்டும்.

படத்தில் முன்பாதியில் அதிகப்பாடல்கள் இருந்தாலும்…சில இடங்களில் படம் மெதுவாக நகர்ந்தாலும் படம் நம் முன் சமூகத்திற்கு தேவையான கருத்தை முன் வைத்துள்ளது.
அதனால் மாயநதி படத்தைக் கொண்டாட வேண்டும்

மாயநதி-உணர்ச்சி நீரோட்டம்

-மு.ஜெகன்சேட்