Tamil Movie Ads News and Videos Portal

மாவீரன்- விமர்சனம்

கிட்டத்தட்ட ஒரு சூப்பர் ஹீரோ கதை தான் மாவீரன்

சென்னை கடற்கரையோரம் குடியிருக்கும் சிவகார்த்திகேயன் உள்பட பல குடும்பங்களை அப்பார்ட்மெண்டிற்கு மாற்றுகிறார் மினிஸ்டர் மிஷ்கின்..அந்த புது அப்பார்ட்மெண்ட் ஓட்டையும் ஒடைசலுமாக மாற, அதைத் தட்டிக்கேட்கும் சூழலுக்குள் சிவா தள்ளப்படுகிறார். இயற்கையிலே பயந்த சுபாவம் கொண்ட சிவா எப்படி மினிஸ்டரை எதிர்க்கும் பலசாலியாக மாறுகிறார்? என்பது மீதிக்கதை

காமிக்ஸ் கதை எழுதும் இளைஞனாக சிவகார்த்திகேயன் நன்றாகவே நடித்துள்ளார். விஜய்சேதுபதியின் குரல் மூலமாக சூப்பர் பவர் கிடைக்கும் இடங்களிலும் ஸ்கோர் செய்கிறார் SK. அதிதி சங்கர் கேரக்டருக்கு இன்னும் வலிமை சேர்த்திருக்கலாம். கொடுத்த வேலையை அவர் குறைவின்றியே செய்துள்ளார். சரிதா மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல இடங்களில் அப்ளாஸ் வாங்குகிறார். மிஷ்கின் தன் கேரக்டருக்கான பொறுப்பை உணர்ந்து மாஸ் பண்ணியிருக்கிறார். யோகிபாபுவை மிகச்சரியாக பயன்படுத்தியுள்ளனர். அவரும் அசத்தியுள்ளார்

பின்னணி இசையில் பெரிதாக கவனம் பெறுகிறார் இசை அமைப்பாளர். பாடல்களில் இன்னும் துள்ளலை காட்டியிருக்கலாம். விது அய்யண்ணாவின் ஒளிப்பதிவு நிறைய ஏரியல் வீவ் ஷாட்களில் தம்ஸப் காட்டுகிறது. இரவு சண்டைக்காட்சி ஒன்றில் லைட்டிங் பிரமாதம். எடிட்டர் இயக்குநரிடம் சண்டை போட்டாவது இன்னும் 20 நிமிட படத்தை எடிட் செய்திருக்கலாம்

நாயகனுக்கு தான் வாழும் இடத்தில் பிரச்சனை. அவரோடு சேர்ந்து இன்னும் பலரும் பாதிக்கப்படும் சூழலில் அவர் எடுக்கும் முடிவு, அதோடு அவரிடம் இணையும் சூப்பர் பவர், அதன்மூலம் தீர்வை நோக்கி நகர்ந்து திடீர் திடீர் என முளைக்கும் பிரச்சனைகள் என ஒரு திரைக்கதை ரைட்டராக அஸ்வின் மடோன் முன்பாதியில் அட்டகாசம் செய்துள்ளார். மேக்கிங்/ரைட்டிங் இரண்டுமே படத்தை வேறோர் இடத்திற்கு கொண்டு செல்கிறது. இவை முன்பாதியில் தான். பின்பாதியில் அத்தகைய அழுத்தமும் திருத்தமும் திரைக்கதையில் இல்லை என்பது வருத்தமான நிஜம். மிஷ்கின் சிவா மோதல் தான் படத்தின் மாஸ் மொமெண்ட் என்பதாக முன்பாதியில் சொல்லிவிட்டு, பின்பாதியில் அதற்கான காட்சிகளை சரியாக அடுக்கவில்லை. பல இடங்களில் க்ளிஷே காட்சிகளும் நம்மை சற்று சலனப்படுத்துகிறது.

மாவீரன் முன்பாதியில் காட்டிய வீரத்தை பின்பாதியில் காட்ட தவறிவிட்டான்.

But

நல்ல தரமான ரைட்டிங், ஆக்டிங், பட டீமின் உழைப்பு ஆகியவற்றுக்காக மாவீரனை ஒருமுறை பார்க்கலாம்
2.75/5
-மு.ஜெகன் கவிராஜ்

#Maaveeran #மாவீரன்