கிராமத்துப் பின்னணியில் மீண்டும் ஒரு சீனுராமசாமி படம்
விஜய்சேதுபதி தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் ஆட்டோ டிரைவாக இருக்கிறார். மனைவி காயத்ரி, மகன் மகளுடன் வசதி குறைந்த வாழ்க்கை என்றாலும் நிம்மதியாக இருக்கிறார். அந்த நிம்மதிக்கு பங்கம் விளைவிக்க ரியல் எஸ்டேட் சீட்டர் ஷாஜி வருகிறார். விஜய்சேதுபதி ஷாஜியின் தொழிலோடு கூட்டணி சேர, ஷாஜி ஊராரின் பணத்தை அடித்துக் கொண்டு ஓட..விஜய்சேதுபதி நிலைமை என்னானது என்பதே மாமனிதன் கதை
விஜய் சேதுபதி ஒரு கிராமத்து முதிர்ந்த இளைஞனை நம் கண்முன் நிறுத்தி அசத்தியிருக்கிறார். அன்பில் சிக்கி உருகும் போதும், வம்பில் மாட்டி உடையும் போதும்..அடடா விஜய்சேதுபதி!! அவருக்கு அடுத்து படத்தில் குருசோமசுந்தரம் வாப்பாவாக வாழ்ந்திருக்கிறார். ஓர் எமோஷ்னல் காட்சியில் அவர் காட்டும் பெர்பாமன்ஸ் தூள் ரகம். காயத்ரி கிடைக்கும் இடங்களில் எல்லாம் தேர்ந்த நடிப்பை கொடுக்கிறார். சின்னச் சின்ன கேரக்டர்களும் படத்தில் கவனம் ஈர்க்கிறார்கள். காவல்துறை அதிகாரியாக வரும் நடிகர் தங்கசாமி மிக இயல்பாக நடித்து பெயர் வாங்குகிறார்
சீனுராமசாமி டச் என்று சொல்ல..பல இடங்கள் படத்தில். குறிப்பாக கிராமத்து மனிதர்களின் வசனங்கள். கிராமத்தின் ஏரியல் ஷாட்கள் முதல், வைட் ஷாட்கள் இரவுக்காட்சிகள் என கேமராமேனின் முத்திரை பல இடங்களில் தனித்துத் தெரிகிறது. இளையராஜாவும் யுவன்சங்கர் ராஜாவும் பாடல்களை விட பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள்
ஒரு நல்ல Feel Good movie எப்படி துவங்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது படத்தின் ஆரம்ப 20 நிமிடங்கள். மகளிடம் சொல்வதாக துவங்கும் படத்தில் அத்தனை இயல்பும் அழகும். அப்படியே பயணிக்க வேண்டிய படம் தடார் என சினிமாட்டிக்காக மாறிவிடுகிறது. அதிலும் பெரிய குறைபாடுகள் ஏதுமில்லை. குடும்பத்தை விட்டுச் சென்றாலும் தன் உள்ளத்தில் குடும்பத்தை ஏந்தி வாழும் நாயகனின் கேரளா வாழ்க்கை, காசி வாழ்க்கையை இயக்குநர் படத்தின் இறுதிக்காட்சியில் நியாயப்படுத்துகிறார். ஆனால் குடும்பத்திற்காக விஜய்சேதுபதி கஷ்டப்படுவதை விட, விஜய்சேதுபதியால் குடும்பம் கஷ்டப்படுவது தான் நம் மனதில் வதையாக விதைகிறது. அதனால் மாமனிதன் என்ற டைட்டிலுக்கு படத்தின் முடிவு நியாயம் செய்யவில்லை தான். இருப்பினும் பிள்ளைகளை வளர்க்க பெற்றவர்கள் படும் பாடுகளையும், படிப்பின் அவசியத்தையும், நட்பின் ஆழத்தையும் மிக அழகாக கிராமத்து வாசனையோடு தூவிச் செல்லும் இந்தப்படம் அவசியம் காணவேண்டிய படம்
-மு.ஜெகன் கவிராஜ்