Tamil Movie Ads News and Videos Portal

’லக்கி பாஸ்கர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

மலையாள மெகாஸ்டாரும் உலகப் புகழ்பெற்ற நடிகருமான மம்முட்டியின் வாரிசாகவே சினிமாவில் தனது பயணத்தை துல்கர் சல்மான் தொடங்கினார். ஆனால், சில ஆண்டுகளிலேயே தனது கதைத் தேர்வு மற்றும் திறமையான நடிப்பால் வாரிசு நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து அனைத்து மொழிகளிலும் பார்வையாளர்களால் விரும்பப்படும் ஒரு இந்திய நடிகராக மாறினார் துல்கர். கடந்த 12 வருடங்களாக தனது நடிப்பின் மூலம் பெரும் பெயரையும் புகழையும் பெற்ற இவர் இன்றைய தலைமுறையினர் விரும்பும் பல கல்ட் படங்களைக் கொடுத்துள்ளார்.

ஒவ்வொரு பார்வையாளர்களும் பார்த்து ரசிக்கக்கூடிய நல்ல படங்களைக் கொடுத்து வரக்கூடிய சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார் துல்கர். தன்னுடைய கதை மற்றும் படத்தின் கதாபாத்திரங்களை ரசிகர்கள் விரும்பும்படி தனித்துவமாக கொடுத்து வரக்கூடிய இயக்குநர் வெங்கி அட்லூரி, ஒரு வங்கி காசாளராக துல்கர் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கியுள்ளார்.

துல்கர் சல்மான் நடிகராக 12 ஆண்டுகள் திரைத்துறையில் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வங்கியில் பணிபுரியும் பேங்க் கேஷியராக துல்கர் சல்மான் உள்ளார். மகதா வங்கியில் பணிபுரியும் ஒரு வங்கி காசாளராக துல்கரின் தோற்றம் இதில் உள்ளது. துல்கரின் நடிப்பு மற்றும் போஸ்டர் டிசைன் பார்வையாளர்கள் மத்தியில் சுவாரஸ்யமூட்டக் கூடியதாக அமைந்துள்ளது. இப்படம் 80களின் காலகட்டமான பாம்பே (தற்போதைய மும்பை) பின்னணியைக் கொண்டது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.